சென்னை : “ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்” என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார்.
பாஜக மாநில ஐடி விங் தலைவராக நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
குறிப்பாக தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாகவும் இதை தலைமை கண்டும் காணாமல் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். இந்நிலையில், இந்த விஷயங்கள் தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் கிருஷ்ண பிரபு.
கிருஷ்ண பிரபு பிரத்யேக பேட்டி : ஒன் இந்தியாவுக்கு கிருஷ்ண பிரபு, அளித்துள்ள பேட்டியில், “ஆருத்ரா எனும் நிதி நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேரிடம் இருந்து ரூ. 2,438 கோடி வரை மோசடி செய்திருக்கிறது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட ஒருவர் மாநில செயலாளராக இருக்கிறார். இது பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அவர் அண்ணாமலை மட்டுமல்லாது முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் நெருக்கமானவர். மக்கள் பணத்தை மோசடி செய்யும் நபரை இன்று பாஜக மாநில தலைமை காப்பாற்றுகிறது என்றால், நாளை ஆட்சிக்கு வந்தால் மக்களை ஏமாற்ற மாட்டார்கள் எனபது என்ன நிச்சயம்?
மோசடியில் ஈடுபட்டவரை கூடவே வைத்திருப்பது, நான் வெளியில் தான் நல்லவன் போல காட்டிக்கொள்வேன் என பட்டவர்த்தனமாக தெரிவிப்பது போல இருக்கிறது. பாஜகவில் மாநில செயலாளராக இருக்கும் ஹரீஷ் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. திடீரென மாநில பொறுப்பு கொடுக்கிறார்கள். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை திடீரென ஒருவருக்கு பொறுப்பு கொடுத்து புகைப்படம் எடுக்கிறார் என்றால் அவரைப் பற்றி என்ன தெரிந்துகொண்டார்?
ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை? : ஆருத்ரா மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கமலாலயத்தை முற்றுகையிடுகிறார்கள். அப்போதாவது சம்பந்தப்பட்டவரை கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கினாரா என்றால் அதுவும் இல்லை. இன்னும் கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார். அப்படியென்றால், கட்சியில் பொறுப்பு வழங்க மறைமுகமாக ஏதோ ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு தூக்க முடியவில்லை.
டாக்டர் சரவணன் தான் எனக்கு மண்டல் பொறுப்பு கொடுத்தார். எனது பணிகளைப் பார்த்து, மாவட்ட ஐடி விங் செயலாளர் பொறுப்பு கொடுத்தார். அவர் தான் என்னை பொருளாதார பிரிவு மாநில செயலாளராக்கவும் பரிந்துரை செய்தார். சிலபல பிரச்சனைகளால் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து வெளியேறினார். அவர் சென்ற பிறகு மாநில செயலாளர் பொறுப்பில் நான் தொடர வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா என்னிடம் கேட்டார். பணத்தைக் கொடுத்துத்தான் இந்தப் பொறுப்பில் தொடர்ந்து வந்தேன்.
பணம் கொடுத்தால் தான் பொறுப்பு : அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவரான பிறகு, ஒவ்வொரு மட்டத்திலும், பணம் வாங்கிக்கொண்டுதான் பொறுப்புகளை வழங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் மண்டல் பொறுப்புக்கே ரூ.50 ஆயிரம் வாங்கிக் கொண்டுதான் நியமிக்கிறார்கள். அப்படியென்றால், மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்புகளுக்கு எவ்வளவு என்று யோசித்துப் பாருங்கள்.
நான் இல.கணேசன் மாநில தலைவராக இருந்த காலம் முதல் கட்சியில் இருக்கிறேன். அன்றைக்கு இருந்த பாஜகவுக்கும், இன்று இருக்கும் கட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று, முழுக்க முழுக்க கட்சியின் கொள்கையை வெளிப்படுத்தி கட்சியை வளர்த்தார்கள். இன்று தன்னை முன்னிலைப்படுத்தும் நிலை இருக்கிறது. கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு பொறுப்பு கொடுக்கிறார்கள்” என பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் கிருஷ்ண பிரபு.