லக்னோ:
“உத்தரபிரதேசத்தின் பாட்ஷா” என அழைக்கப்படும் பயங்கர ரவுடியான அடிக் அகமது, போஸீஸார் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் போட்டு அடிக் அகமதையும், அவரது சகோதரையும் சுட்டுக் கொன்றவர்களை தேச பக்தர்கள் என பாஜக அழைக்கப் போகிறதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஓட்டல் தொழிலாளி டூ பயங்கர தாதா..
உத்தரபிரதேசத்தையே ஆட்டிப்படைத்து வந்த பயங்கர ரவுடி அடிக் அகமது. ஓட்டலை கூட்டிப் பெருக்கும் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அடிக் அகமது, ஒரு மாநிலத்தையே தனது கைக்குள் வைத்திருக்கும் தாதாவாக மாறியது தனிக்கதை. இவர் மீது 100-க்கும் மேற்பட்ட கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும்.. அதுவும் அந்தக் கொலை பற்றி மக்கள் 10 நாட்களாகவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அடிக் அகமது கடைப்பிடித்து வந்த ‘பாலிசி’. அதனால் தனது எதிரிகளை மிகக்கொடூரமாக அடிக் அகமது கொலை செய்வாராம்.
நிழல் சாம்ராஜ்யம்
அடிக் அகமது மட்டுமல்லாமல் அவரது சகோதரர்கள், மகன்கள் என அனைவருமே தாதாக்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். உபியில் யார் எந்த தொழிலை தொடங்கினாலும் அடிக் அகமது குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. இவ்வாறு ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்தி வந்த அவர்களின் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தின் மொத்த சொத்த மதிப்பு ரூ.11000 கோடி எனக் கூறப்படுகிறது.
ஒரே வாரம் – குடும்பமே சுட்டுக்கொலை
இவ்வாறு உபி அரசாங்கத்துக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த அடிக் அகமதுவை தான் இன்று மர்மநபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு எம்எல்ஏ ஒருவரை கொலை செய்த வழக்கில் அடிக் அகமது சிறையில் இருந்து வந்தார். இதனிடையே, இந்த வழக்கில் சாட்சியாக இருந்த நபரை சுட்டுக் கொன்றதாக அடிக் அகமதின் மகன் ஆசாத்தை போலீஸார் தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் இரு தினங்களுக்கு முன்பு ஆசாத் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தனது மகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு செல்லும் வழியில் மர்மநபர்கள் அடிக் அகமதையும், அவரது தம்பி அஷரஃபையும் சுட்டுக் கொன்றனர்.
ஒவைசி கண்டனம்
போலீஸார் முன்னிலையில் நடந்த இந்தக் கொலை சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கூறும் போது, “உபியில் குற்றங்கள் தலைவிரித்தாடி வருகின்றன. இத்தனை போலீஸார் இருக்கும் போது, ரவுடிகள் துணிச்சலாக வந்து கொலை செய்துள்ளனர். இதுதான் உபியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு.
ஜெய் ஸ்ரீராம் கோஷம்
அடிக் அகமதையும், அவரது சகோதரையும் கொலை செய்துவிட்டு, கொலையாளிகள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது.. இந்தக் கொலையாளிகளை தேச பக்தர்கள் என அழைக்கப் போகிறீர்களா..பட்டப்பகலில் நடந்திருக்கும் ஒரு கொலையை சிலர் கொண்டாடுவதை என்னவென்று கூறுவது? இதுதான் பாஜக கூறும் சட்டத்தின் ஆட்சியா?” என ஒவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.