எடப்பாடி முன்னால் இரட்டை சிக்கல்… சரியா 1.30 மணிக்கு… கர்நாடக தேர்தல் கணக்கும், கழக பொ.செ பதவியும்!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர்

தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் 1.30 மணிக்கு கூடுகிறது. முன்னதாக ஏப்ரல் 7ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாற்று தேதியாக ஏப்ரல் 16ஆம் தேதி அன்று நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதிமுக அவசர செயற்குழு

இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல். வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1983, 1989, 1994, 1999 என நான்கு முறை ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் பெற்றிருந்தனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் 2023 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் சேர்ந்து போட்டியிட எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். முன்னதாக பொதுச் செயலாளர் பதவியை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு தனது பதவிக்கான அங்கீகாரத்தை உள்ளார். இத்தகைய சூழலில் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது தனக்கான மதிப்பை மேலும் அதிகரிக்கும்.

எடப்பாடி பழனிசாமி திட்டம்

அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதையொட்டி இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் கர்நாடகாவில் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படலாம். இல்லையெனில் பாஜகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடலாம். இதையடுத்து கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு

பொதுச் செயலாளராக தான் பதவியேற்ற பின்னர், கட்சியை பலப்படுத்த வேண்டும். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்பது எடப்பாடியின் எண்ணம். அதற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் உதவிகரமாக இருக்கும். இதுதொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக இரண்டு சிக்கல்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

ஏற்படுத்தும் சிக்கல்

ஒன்று ஓபிஎஸ் நடத்தும் சட்டப் போராட்டங்கள். சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு எடப்பாடியை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது. ஆனாலும் மேல்முறையீடு, விசாரணை என பிரச்சினை நீண்டு கொண்டு செல்கிறது. இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை சி.வி.சண்முகம் மூலம் தாக்கல் செய்து தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என்று போராடி வருகிறார். இரண்டாவது, எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட முடியாமல் இருப்பது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி

ஏனெனில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்ற உட்கட்சி பிரச்சினையை முன்வைத்து அதிமுக வெளிநடப்பு செய்து வருகிறது. அவ்வப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் முழுமையான எதிர்க்கட்சியாக அதிமுக இல்லை என்கின்றனர். இவை இரண்டையும் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.