புதுடெல்லி: தன்னை கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திர சேகர ராவின் மகள் கவிதாவிடம் சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை ஏற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அவருடன் அவருக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் சென்றுள்ளார். இந்த வழக்கில், அர்விந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக, ஊழல் நடைபெறுவதை அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக அர்விந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக, ஐந்து நிமிட வீடியோ ஒன்றை அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ”சிபிஐ விசாரணையில் ஆஜராகி கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பேன். வருமான வரித்துறை ஆணையராக நான் இருந்துள்ளேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ பணம் சம்பாதித்திருக்க முடியும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர் அல்ல.
அவர்கள்(பாஜக) அதிகாரம் மிக்கவர்கள். யாரை வேண்டுமானாலும் அவர்களால் சிறையில் அடைக்க முடியும். அந்த நபர் குற்றம் இழைத்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்று பாஜக, சிபிஐக்கு அறிவுறுத்தி இருக்கிறது. பாஜக சொல்லிவிட்டால் சிபிஐ அதன்படிதான் நடக்கும். நான் எனது நாட்டை, பாரத மாதாவை நேசிக்கிறேன். நாட்டிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.