பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 212 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மஜத 142 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஏற்கெனவே 2 கட்டங்களாக 166 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 3-வது கட்டமாக 43 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று வெளியிட்டது. அதில் பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் துணை முதல்வர் லட்சுமன் சவதிக்கு அதானி தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸில் இணைந்த மறுநாளே அவருக்கு சீட் வழங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மகேஷ் கும்டஹள்ளி அதானியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணாவை தொடர்ந்து கோலார் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு கோலார் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அந்த தொகுதியில் கொத்தூர் மஞ்சுநாத் நிறுத்தப்பட்டுள்ளார். பொம்மனஹள்ளியில் உமாபதி சீனிவாச கவுடாவும், பெங்களூரு தெற்கு தொகுதியில் ஆர்.கே. ரமேஷூம், ஹாசன் தொகுதியில் பனவாசி ரங்கசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் இதுவரை 209 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை கட்சி மேலிடம் முடுக்கிவிட்டுள்ளது.