கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆர் எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்தியடிகள் சாலையிலிருந்து தொடங்கிய பேரணியை ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.பாலாஜி, தலைமை வகித்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி அங்கிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, அதே இடத்தில் முடிவடைந்தது. பின்னர் தொடங்கிய பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை மண்டல நாடார்கள் கூட்டமைப்பு, இந்திய நாடார்கள் பேரவை நகரச் செயலாளர் எஸ்.முனியசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மண்டலப் பொறுப்பாளர் ஐ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.
இதில் தஞ்சாவூர் கோட்ட இணைத் தலைவர் கே,கண்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும், அனுமதியளித்த காவல் துறையைக் கண்டிக்கின்றோம் என முகநூலில் பதிவிட்ட இளைஞர் அரண் ஒருங்கிணைப்பாளர் சைமன் மற்றும் நிர்வாகி ராகவேந்திரன் ஆகிய 2 பேரையும் பிடித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.