அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் நேரங்களில் எழுச்சியை ஏற்படுத்த திருச்சியில் மாநாடு நடத்தி வருவது வாடிக்கை. இவ்வாறு கடந்த 2011 தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் திருச்சியில் நடந்த மாநாடு மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது. அந்த தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியை பெற்றது அதிமுக.
அதனை தொடர்ந்து 2016 தேர்தளுக்கு முன்பும் திருச்சியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் மதுரையில் மாநாடு நடத்துவதற்கான தீர்மானத்தை அதிமுக எடுத்துள்ளது. அந்த வகையில், இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மாநாடு
இன்று ஈபிஎஸ் தலைமையில் நடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தைத் தொடங்கி, கட்டிக் காப்பாற்றி காவல் தெய்வமாகத் திகழ்ந்து, பட்டிதொட்டியெங்கும் வெற்றிக் கொடியை நாட்டினார். பொதுக்கூட்டங்கள் வாயிலாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து ஒரு மாற்றத்தை வித்திட்டார்.
அந்த வகையில் கழக மாநாடுகள் பல கண்டு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து, வரலாறே வியக்கும் வண்ணம் வற்றாத சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். புரட்சித் தலைவர் வழியில், அவரது வாரிசாகத் திகழ்ந்த கண்கண்ட தெய்வம், கலங்கரை விளக்கம், கழகம் காத்த புரட்சித் தலைவி அம்மா திக்கெட்டும் திருச்சியில் “புரட்சி யுகத்தின் எழுச்சி மாநாட்டை” நடத்தியும், கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த, இந்தியத் தலைவர்கள் முதல் தமிழகத் தலைவர்கள் வரை அத்தனை தலைவர்களும் ஒன்றாக சங்கமிக்கின்ற வகையில், திருநெல்வேலியில் மாநாட்டை நடத்தி, மாற்றத்திற்கு வித்திடும் வகையில் நாடாளுமன்ற பொது தேர்தலில் மகத்தான வெற்றிவாகை சூடினார்.
அதனைத் தொடர்ந்து, 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் மாபெரும் வெற்றிவாகை சூடினார். அதைப் போன்றே இயக்கத்தைக் காத்து வருகின்ற, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்று பிடரி சிலிர்த்த சிங்கமென ஜெயலலிதா முழங்கிய அந்த நிலையை மீண்டும் உருவாக்கிக் காட்டும் வண்ணம் அலைகடலென கழகத் தொண்டர்கள் திரளும், கழக மாநில மாநாட்டை, வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடத்துவது என இந்தச் செயற்குழு தீர்மானிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க சசிகலாவுக்கு, டிடிவி தினகரனுக்கும் அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.