கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தகவலின்படி,”இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை பெங்களூரு வருகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கோலாருக்கு பயணமாகிறார். அங்கு கட்சியின் ‘ஜெய் பாரத்’ பேரணியில் பங்கேற்று பேசுகிறார். மாலையில், பெங்களூரு பிசிசி அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பவனை திறந்து வைக்கிறார். அலுவலகம் மற்றும் அரங்கமாக கட்டப்பட்டுள்ள இதில் சுமார் 750 பேர் அமரலாம்.
இந்த விழாவில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பொறுப்பு பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கோலாரில் ஏப்.5 ம் தேதி நடக்க இருந்த பேரணி, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏப்.9-ம் தேதிக்கு மாற்றப்பட்டு இறுதியாக இன்று ஏப்.16ம் தேதி நடக்க இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, இதே கோலாரில் நடந்த கூட்டத்தில் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தொடரப்பட்ட குற்றவியல் வழக்கில் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு அடுத்த நாள் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளானார்.
இதற்கிடையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் கோலார் வருகை கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.