சிறுமி உட்பட நான்கு சிறார்கள் நீரில் மூழ்கி பலி.. தமிழக அரசு இரங்கல்.. நிதியுதவி..!

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள குட்டை, குவாரி, ஏரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். வெயிலை தணிக்க நண்பர்களுடன் சென்று குளித்து கொண்டாடி வருகின்றனர்.

இதில் நீச்சல் தெரியாதவர்களும் செல்வதால் ஆழத்தில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருப்பூரில் இரண்டு சிறுவர்களும், கிருஷ்ணகிரியில் சிறுமி உட்பட இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா

சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன், த/பெ.பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, த/பெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் உள்வட்டம், பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் என்ற முகவரியைச் சேர்ந்த முருகன், பார்வதி தம்பதியினரின் குழந்தைகள் புவனா (வயது 11) மற்றும் வினோத் (வயது 7) ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண

நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.