சிவகாசி: சிவகாசி அருகே நேற்று நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி கார்னேசன் காலனியை சேர்ந்தவர் பிரவீன் ராஜா (42). இவர் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டு வாரிய அனுமதி பெற்று விளாம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 120 தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலையில் உள்ள 42-வது அறையில் கருப்பசாமி (28), தங்கவேல் (55), கருப்பாயம்மாள் (45), மாரித்தாய் (45) ஆகியோர் தரை சக்கரம் பட்டாசுகள் தயாரிப்பிற்காக சல்பர், வெடி உப்பு, அலுமினிய பவுடர் ஆகியவற்றை கலந்து சல்லடையில் அலசும் போது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கருப்பாயம்மாள், மாரித்தாய் ஆகியோர் காயமடைந்த நிலையில், கருப்பசாமி, தங்கவேல் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுபவம் இல்லாதவர்களை பணியில் ஈடுபடுத்தியது, பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து ஆணையூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் ஆலை உரிமையாளர் பிரவீன் ராஜா (42), போர்மேன் சதீஸ்குமார் (31) ஆகியோர் மீது மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.