பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தமிழகத்திற்கும் வந்துவிட்டது. சென்னை டூ மைசூரு என முதல் ரயில் நவம்பர் 11,2022ல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஏப்ரல் 8, 2023ல் சென்னை டூ கோவை இடையில் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு புதிய ரயில் சேவை
495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் சென்றடைகிறது. சென்னை டூ கோவை வழித்தடத்தில் சராசரியாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 பெட்டிகள் இருக்கின்றன. அதில் 7 ஏசி சேர் கார் பெட்டிகள், ஒரே ஒரு ஏசி எக்ஸிக்யூடிவ் பெட்டி அடங்கும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த வழித்தடத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் ரயில் நின்று செல்லும். காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நண்பகல் 11.50 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இங்கிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை,
சென்னை டூ கோவை
ஏசி சேர் கார் – ரூ.1,365
எக்ஸிக்யூடிவ் சேர் கார் – ரூ.2,485
கோவை டூ சென்னை
ஏசி சேர் கார் – ரூ.1,215
எக்ஸிக்யூடிவ் சேர் கார் – ரூ.2,310
டிக்கெட் கட்டண வேறுபாடு
அதாவது, இரு மார்க்கங்களிலும் கட்டணங்கள் மாறுபடுகின்றன. ஒரே பயண தூரம் தான். அதே 5 மணி நேரம் 50 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடந்து சென்றுவிடுகிறது. அப்படி இருக்கையில் ஏன் கட்டணங்கள் வேறுபடுகின்றன என்று பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பு சில விளக்கங்களை அளித்துள்ளது.
உணவு கட்டணம் தான் காரணம்
அதன்படி, கோவை டூ சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தேநீர், செய்தித்தாள், சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதையொட்டி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னை டூ கோவை செல்லும் போது ஏசி சேர் கார் வகுப்பில் அடிப்படை கட்டணம் 941 ரூபாய், உணவு கட்டணம் 288 ரூபாய், முன்பதிவு கட்டணம் 40 ரூபாய், அதிவிரைவு கட்டணம் 45 ரூபாய், ஜி.எஸ்.டி 51 ரூபாய் என 1,365 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதுவே எக்ஸிக்யூடிவ் சேர் கார் வகுப்பில் அடிப்படை கட்டணம் 1,900 ரூபாய், உணவு கட்டணம் 349 ரூபாய், முன்பதிவு கட்டணம் 60 ரூபாய், அதிவிரைவு கட்டணம் 75 ரூபாய், ஜி.எஸ்.டி 101 ரூபாய் என 2,485 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்றால் உணவு கட்டணம் தான் எனக் கூறுகின்றனர்.