சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அக்கட்சியின் நிர்வாகி எஸ்.வி. சேகர் போட்டு வரும் ட்வீட்டுகள் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச்சுக்கு பில் தர வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டாலும் கேட்டார்.. இன்னும் அந்த விவகாரம் முடிந்த பாடில்லை.
ஏப்ரல் 14-ம் தேதி தனது ரபேல் வாட்ச் பில்லுடன் சேர்த்து திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்ததால் அந்த நாளுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.
களத்தில் அண்ணாமலை.. கலாய்க்கும் திமுகவினர்
ஆனால், அண்ணாமலையோ ஊழல் பட்டியலுக்கு பதிலாக திமுகவினரின் சொத்துப் பட்டியல் எனக் கூறி ஒரு எக்ஸல் ஷீட்டை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிடப் போகும் போது ஊழல் பட்டியலால் தமிழகமே கதிகலங்கப் போகிறது என ஏகத்துக்கும் பில்டப் செய்து பாஜகவினரே, அவர் வெளியிட்ட எக்ஸல் ஷீட்டை பார்த்து நொந்து போயினர். மேலும், அவர் வெளியிட்ட ரபேல் வாட்ச் பில்லிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் அது ஒரு பில்லே இல்லை.. சாதாரண ரெசிப்ட் என்று திமுகவினர் கலாய்த்து வருகின்றனர்.
வாடகை தரும் நண்பர்கள்
அதேபோல, முதலில் அவர் கூறிய வாட்சின் சீரியல் நம்பருக்கும், தற்போது அவர் வெளியிட்ட பில்லில் உள்ள சீரியல் நம்பரும் வேறு வேறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தனது வீட்டு வாடகை, காருக்கான பெட்ரோல், பணியாளர்களுக்கான ஊதியம் என அனைத்தையும் தனது நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என ஓபனாக சொன்னார் அண்ணாமலை. தற்போது அதுவே அவருக்கு வினையாக மாறி வருகிறது. இந்திய சட்டப்படி அன்பளிப்புக்கும் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. தற்போது இந்த பாயிண்ட்டை பிடித்து திமுகவினர் அவரை வம்புக்கு இழுத்து வருகின்றனர். மேலும், “மாதம் மாதம் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தும் அந்த நண்பர்களை எனக்கே பார்க்கணும்னு தோனுதே..” என மீம்ஸ்களும் பறந்து வருகின்றன.
வெறுப்பேற்றும் எஸ்.வி. சேகர்
சரி.. அவர்களாவது எதிர்க்கட்சி.. அப்படிதான் செய்வார்கள்.. ஆனால் சொந்த கட்சியினரே இந்த விவகாரத்தை வைத்து கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் நேற்று சில ட்வீட்டுகளை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ‘ரத்த சம்மந்த உறவுகளை தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமான வரி கட்ட வேண்டும். ஏதாவது பழைய பொருள் வாங்கினால் ரூ.19 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுக்கக் கூடாது. RS.10 L x 12 = RS. 1.2 crores. இதுவே பெரிய ஊழலா இருக்கே.. IT தம்பி இது என்னன்னு விசாரி’ எனக் கூறியுள்ளார்.
“மானஸ்தன்”
அதேபோல, அடுத்த பதவில், “லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமான வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன். நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.வி. சேகர். எனினும், இந்த பதிவுகளில் யார் பெயரையும் எஸ்.வி. சேகர் குறிப்பிடவில்லை.