டோக்கியோ-ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், இளைஞர் ஒருவர் குண்டு வீசிய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், பார்லி.,க்கான இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல், வரும் 23ம் தேதி நடக்கிறது.
தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா, பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்துக்கு நேற்று சென்றார்.
கூட்டத்தில் உரையாற்றத் துவங்கியபோது, பார்வையாளர் இடத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் புமியோ மீது திடீரென ‘பைப்’ வெடிகுண்டை வீசினார். இதனால், அப்பகுதியே புகைமண்ட லமானது. கூட்டத்துக்கு வந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர்.
இதையடுத்து, அங்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் பிரதமரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக புமியோ காயமின்றி உயிர் தப்பினார்.
குண்டு வீசிய இளைஞரை, உடனடியாக கைது செய்த போலீசார், அவரை குண்டுகட்டாக துாக்கிச் சென்றனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டுவீச்சுக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.
ஹிரோஷிமாவில், அடுத்த மாதம் 19ம் தேதி ‘ஜி – 7’ உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், வரும் 23ம் தேதி நடக்கவிருக்கும் சூழலில், இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், புமியோ பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசப்பட்டது இங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.