தமிழகத்தில் நேற்று புதிதாக 502 பேருக்கு
கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 136, கன்னியாகுமரியில் 52, கோவையில் 42, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 28, சேலத்தில் 27 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 7 மாவட்டங்களில் பாதிப்புகள் 10 முதல் 19க்குள் இருக்கின்றன. எஞ்சிய 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டங்கள்
கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே ஒரு பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அவருக்கு வயது 84. திருப்பூரை சேர்ந்த இவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் உடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா பலி எண்ணிக்கை
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நடப்பாண்டில் பதிவாகும் 6வது பலி எண்ணிக்கை ஆகும். இணை நோய்கள் இருக்கும் நபர்களுக்கு தான் பாதிப்பு தீவிரமடைகிறது. பலி எண்ணிக்கையில் இடம்பெறுபவர்களும் அவர்கள் தான். தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,048ஆக அதிகரித்திருக்கிறது. இவர்களில் 152 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள்
3 பேர் அவசர சிகிச்சை மையங்களிலும், 68 பேர் ஆக்சிஜன் உதவியுடனும் இருக்கின்றனர். எஞ்சியவர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஏனெனில் காய்ச்சல், இருமல் என லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. மருத்துவமனைகளில் வயதானவர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகக்கவசம் கட்டாயம்
இதுதான் லேட்டஸ்ட் கள நிலவரம். மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் கிளஸ்டர் என்று சொல்லப்படும் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் முகக்கவசம் கட்டாயம் என்று பொது வெளியில் சொல்லப்படவில்லை. மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்டவற்றில் மட்டும் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வாராந்திர பாசிடிவ் விகிதம் என்பது 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு
தினசரி பாதிப்பு விகிதத்தை பொறுத்தவரை மாநில சராசரி 8.4 சதவீதமாக இருக்கிறது. இதைவிட அதிகமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அவற்றில் செங்கல்பட்டு (11.5), கன்னியாகுமரி (11.4), கோவை (11.2), திருவள்ளூர் (10.5), சென்னை (10.2) ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ். செல்வ விநாயகம் முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலை
அதாவது, கிட்டதட்ட மூன்றாவது அலை எப்படி இருந்ததோ அதைப் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரானின் உருமாறிய வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய சூழலோ, ஆக்சிஜன் தட்டுப்பாடோ, பலி எண்ணிக்கை அதிகரிப்போ எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.