தமிழிலும் சி.ஏ.பி.எப். தேர்வு: அமித்ஷா காட்டிய க்ரீன் சிக்னல்: ஸ்டாலின் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF – Central Armed Police Force ) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிவிப்பில், இனி வரும் காலங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளையும் சேர்த்து சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிஆர்பிஎஃப் தேர்வுகள் பிராந்திய மொழிகளில் எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி அல்லாத பிராந்திய மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர்

, கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தாராமையா, குமாரசாமி உட்பட இந்தி பேசாத மற்ற மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடித்தத்தில், “சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் தேர்வில் 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இது துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. எனவே சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தை இன்று (ஏப்ரல் 15) மீண்டும் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “ மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் விளைவாக ஒன்றிய அரசு அனைத்து மாநில மொழிகளிலும் CAPF தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். மேலும் அனைத்து ஒன்றிய அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.