கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கோவிட் வேரியன்ட் எத்தகைய வீரியம் உடையது, அது ஆபத்தானதா போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.
“தற்போதைய சூழலில் கோவிட் தொற்று ஆங்காங்கே ஏற்பட்டாலும் பெரிதாக பயம்கொள்ளத் தேவையில்லை. இதற்கு முக்கியமாக இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தத் தொற்றின் வீரியம் ஆரம்பக் காலகட்டங்களில் இருந்ததை விட தற்போது குறைவாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தொற்று என இல்லாமல், எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் பல அலைகளைக் கடந்து வருகையில் தொற்றின் வீரியம் குறைந்து விடும். அதுபோலவே கோவிட் தொற்றின் வீரியமும் குறைந்து விட்டது. இன்னொரு காரணம், மக்களிடம் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக உள்ளது. தடுப்பூசி பலருக்கும் செலுத்தப்பட்டுவிட்டது.
பலருக்கு ஏற்கெனவே நோய் பாதிப்பு ஏற்பட்டு, இயற்கையான எதிர்ப்பாற்றல் உடலில் இருக்கும். இவை அனைத்துமே மீண்டும் நோய்பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டுவர உதவும். இதுதவிர, மருத்துவ வசதியும் தற்போது தரமாக உள்ளது. கோவிட் தொற்று ஏற்படத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில், அது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய புதிராக இருந்தது. ஆனால் தற்போது போதுமான மருத்துவ வசதியுடன் நோயை எப்படிக் கையாள வேண்டும் என மருத்துவர்களுக்குத் தெளிவாக தெரிந்துள்ளது.
இவை அனைத்தும் கோவிட் தொற்று ஏற்பட்டாலும், அதை சேதமில்லாமல் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. தொற்றின் காரணமாக ஆங்காங்கே ஒன்றிரண்டு மரணங்கள் ஏற்படுகின்றன. அவை பெரும்பாலும் வேறு ஏதேனும் இணைநோயுடன் இருப்பவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படும் போது நேருகின்றன. எனவே, வயதானவர்கள், வேறு ஏதேனும் நோய்பாதிப்பு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று மருத்துவர் குழந்தைசாமி கூறினார்.
தற்போதுள்ள வேரியன்ட் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து, தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராம்கோபால்கிருஷ்ணனிடம் கேட்டோம். “தற்போது பரவிக் கொண்டிருக்கும் வைரஸ், ஒமைக்ரானின் சப் வேரியன்ட் வகை. இதனுடைய வீரியம் முதலில் தோன்றிய வேரியன்ட்களை விட மிகவும் குறைவானது. எளிதில் பரவும் தன்மை உடையது. ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. சுவாசப் பிரச்னையை அதிகமாக்கி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் நிலை, இந்த வேரியன்ட்டால் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இறப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பது போல் தோன்றுவதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் நோய்த்தொற்று எளிதாகப் பரவுவதால் அதிகமானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, இறப்பு எண்ணிக்கையையும் சற்று உயர்த்தியுள்ளது. ஆனால் வயதானவர்கள், அதிக ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற இணைநோய் பாதிப்பு இருப்பவர்களுக்கே நோயின் தாக்கம் அதிகமாகி, இறப்புவரை நேர வாய்ப்புள்ளது. இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். இதுதவிர, மக்கள் பெரிதாக பயம்கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக் கொண்டாலே போதுமானது” எனக் கூறினார்.