திருப்பதி தரிசனத்தில் முக்கிய மாற்றம்… அலிபிரி டூ காளி கோபுரம்… இலவச டோக்கனுக்கு சீல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமலைக்கு புறப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஏழுமலையானை தரிசித்து முடிக்க 36 மணி நேரம் வரை ஆகிறது.

திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

இதையொட்டி விஐபி தரிசனம் சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள், தனி நபர் வாகனங்கள் மூலம் திருமலைக்கு செல்வோர் ஒருபுறம் இருக்க, நடந்தே சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள் ஏராளம் உள்ளனர். இவ்வாறு நடந்து வரும் பக்தர்களுக்கு அவர்களது கைகளில் இலவச டோக்கன்கள் (Divya Darshan Tokens) கட்டி விடப்படும்.

அலிபிரி நடைபாதை

இவர்களுக்கு திருமலை தரிசனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறை, சமீபத்தில் மீண்டும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அலிபிரி வழியாக திருமலைக்கு நடந்தே செல்லும் பக்தர்களுக்கான இலவச டோக்கன்களில் சில மாற்றங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக காளி கோபுரத்தில் தான் இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.

இலவச டோக்கன் விநியோகம்

ஆனால் இனி அப்படி இல்லை. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் இலவச டோக்கன் வழங்கப்பட்டு விடும். அதன் பின்னர் காளி கோபுரம் சென்றதும் இலவச டோக்கனுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு சீல் வைத்த டோக்கன்கள் உடன் வருகை புரிவோர் தான் திருமலையில் அனுமதிக்கப்படுவர். தற்போது நாள் ஒன்றுக்கு 8,000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேவஸ்தானம் புதிய ஏற்பாடு

அதிகப்படியான நேரம் எஞ்சியிருந்து அதற்குள் டோக்கன்கள் தீர்ந்து விட்டால் அடுத்த நாளுக்கான டோக்கன்களை வழங்கலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் திருப்பதியில் வழக்கமாக இலவச தரிசனத்திற்கு டோக்கன்கள் வழங்கும் இடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம், ஸ்ரீனிவாசம் கட்டட வளாகம், பூதேவி கட்டட வளாகம் ஆகிய இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

திருப்பதியில் புதிய மாற்றம்

இவை திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸம் கட்டட வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே திருப்பதி வந்திறங்கிய உடன் பக்தர்கள் இலவச டோக்கன்களை பெற வரிசையில் போய் நின்று கொள்ளலாம். தற்போது அனைத்து கவுன்ட்டர்களிலும் விடிய விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

எனவே முன்கூட்டியே சரியான முறையில் திட்டமிட்டு திருப்பதி பயணம் மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட்களை முன்பதிவு செய்து வர முயற்சிப்பது நல்லது என்கின்றனர் தேவஸ்தான அதிகாரிகள். நேரில் வந்தால் சிரமம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.