புதுடெல்லி: நான் ஊழல்வாதி என்றால், உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் கிடையாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது:
அமலாக்கத் துறையும் சிபிஐயும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் பொய்களைப் பதிவு செய்துள்ளன. மதுபான உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெறவில்லை. பொய்யாக குற்றம் சாட்டி மணிஷ் சிசோடியாவை சிறையில் அடைத்திருக்கின்றனர்.
சிசோடியாவை கைது செய்த பிறகு கேஜ்ரிவாலுக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக வாக்குமூலம் அளிக்கக் கோரி சிபிஐ, அமலாக்கத் துறை நிர்பந்தம் செய்தது. அவர் மறுத்துவிட்டதால் சந்தன் ரெட்டி, அருண் ராமச்சந்திர பிள்ளை, சமீர் மகேந்திரு, மனாஸ்வி, ரோஷன் ஆகியோரை துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மிரட்டி வலுக்கட்டாயமாக இவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.
ஓராண்டு விசாரணைக்குப் பிறகு ஆம் ஆத்மிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. லஞ்சமாக பெறப்பட்ட பணம் கோவா தேர்தலில் செலவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். அந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் காசோலை வாயிலாகவே பணம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக கோவா வர்த்தகர்களிடம் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. கேஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் கிடையாது.
டெல்லி சட்டப்பேரவையில் அண்மையில் ஊழலுக்கு எதிராக நான் பேசினேன். அப்போதே அடுத்து எனக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரியும். கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று பாஜக தலைவர்கள் ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர். என்னை கைது செய்ய சிபிஐ-க்கு பாஜக உத்தரவிட்டால், அந்த அமைப்பால் எப்படி மறுக்க முடியும்? பாஜகவின் உத்தரவுகளையே சிபிஐ பின்பற்றுகிறது. இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.