பாட்னா: பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முழு மது விலக்கு அமலுக்கு வந்தது. அதன் பிறகு அம்மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பஹர்பூர் மற்றும் ஹர்சித்தி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்.
அதன் பிறகு சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, மாநில அரசின் மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த சிறப்புக் குழு சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இக்குழுவில் 5 காவல் துறை அதிகாரிகள், 2 டிஎஸ்பிகள் மற்றும் 3 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் இதுவரை 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, “இது வருத்தமளிக்கும் சம்பவம். இதுதொடர்பான விரிவான விவரங்களை வழங்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
கள்ளச்சாராய மரணங்கள் தொடர் கதையாக இருப்பது குறித்து நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது பாஜக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பாஜக உறுப்பினர்களுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே சட்டப்பேரவையில் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொறுமையிழந்த நிதிஷ் குமார் கூறும்போது, “கள்ளச் சாராயம் குடிப்பவர்கள் இறக்கத் தான் செய்வார்கள். முழு மது விலக்கு அமல்படுத்துவதற்கு முன்பு கூட இங்கு கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்கிறது. மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.