கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விளைவதற்கு ஏற்ற மண்வளம், மிதமான தட்பவெப்ப நிலை நிலவும். இதனால் இங்கு ஆண்டுதோறும் பன்னீர் திராட்சை விளைச்சலாகும்.
இந்த கருப்பு பன்னீர் திராட்சையில் மருத்துவ குணம் இருப்பதால் அண்டை மாநிலமான கேரளாவில் இதற்கு தனி விற்பனை உண்டு. ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள மராட்டிய மாநிலத்தில் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதம் மட்டுமே திராட்சை கிடைக்கும். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அறுவடை நடைபெறும்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது அந்த பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை நல்ல நிலையில் விளைச்சல் உள்ளது. விவசாயிகள் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.