`வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு ஏனென்று கேட்காதே; எனக்கு 25% கொடு என கேள்'- மதுரையில் சீமான் பேச்சு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மூக்கையாத்தேவருக்கு விழா எடுப்பது கடமைக்காக அல்ல, அது என் கடமை. தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் இருந்து கச்சத்தீவு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பியிருக்கிறார்.

விழாவில் சீமான்

வைகை அணை கட்டுவதற்கு முன்பு, அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தந்தார். எளிய மக்களின் கல்விக்காக 3 கல்லூரிகளை உருவாக்கினார். அவர் ஒரு சாதிய தலைவர் அல்ல சாதித்த தேசத் தலைவர், தாத்தா மூக்கையாத்தேவருக்கு அரசு விழாவாக எடுப்பேன். அதே போன்று மூக்கையாத்தேவர் பெயரிலும், பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தியாகம் செய்த 16 பேரில் ஒருவரான வீரமங்கை மாயக்காள் பெயரிலும் கல்லூரிகளை உருவாக்குவேன்.

அதில் பணக்காரனுக்கோ அதிக மதிப்பெண் பெற்றவருக்கோ சீட் கிடையாது. ஏழைகளுக்கும், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும்தான் வாய்ப்பு. அதே போன்று வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் ஏன் கொடுத்தீர்கள் எனக் கேட்காதீர்கள். `எங்களுக்கு 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுங்கள்’ என கேளுங்கள். நான் உங்களுடன் நிற்கிறேன்.

சீமான்

நான் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி டி.என்.டி சான்று வழங்குவேன். சாதி வேணாம்கிற, சாதியை விட்டு வெளியே வரணும்னு சொல்ற சீமான், சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் வேணும்னு சொல்றார்னு கேட்கிறாங்க.

அதுபோல் மாட்டுக்காக போராடுனவர் மாட்டுக்கறி சாப்பிடுகிறார் என்றனர். நான் போராடுனதே மாட்டுக்கறி சாப்பிடத்தான். அதுபோலத்தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நான் வலியுறுத்துவதே, பிறப்பின் அடிப்படையிலுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கத்தான்.

பெரியார் மண்ணு, சமூகநீதி காத்த வீரங்கணை, சமூக நீதிக்காவலர்னு சொல்வாங்க… ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மாட்டாங்க. ஆனால், ஒன்னும் சொல்லாத பீகார்ல நிதிஷ் குமார் எடுக்க உத்தரவிட்டிருக்கார். உ.பி-ல அகிலேஷ் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்றார். இங்கெல்லாம் ஏன் எடுக்க மாட்டேங்கிறான்னா, எடுத்தால் `இவ்வளவு நாளா ஏமாத்திட்டிருந்தீங்களா’ன்னு நம்ம ஆளுங்க எல்லாம் கொந்தளிச்சிடுவான்.

நம்முடைய நீர்வளம், நிலவளத்துக்குப் பிரச்னை எனும்போது கேட்க ஆள் இல்லை. நானாக இருந்தால் ஆளுநர் மாளிகைக்கு பூட்டுப் போடுவேன், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பைத் துண்டிப்பேன். அப்போது என்னிடம் தானே வர வேண்டும், இல்லையெனில் ஆட்சியைக் கலைப்பார்கள்… மீண்டும் தேர்தல் வரும், அப்போதும் நான்தான் வெற்றி பெறுவேன்.

சீமான்

பி.கே.மூக்கையாத்தேவருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செய்வேன்” என்றார். முன்னதாக விழா மேடைக்கு வர உசிலம்பட்டி நகர வீதிகளின் வழியாக நடந்தே வந்த சீமானுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வேல் கம்பு, வெட்டருவாள் மற்றும் புத்தகங்கள் அடங்கிய கூடை வழங்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.