முன்பு மணிரத்னமின் `ஆயுத எழுத்து’ படத்தில் வில்லனாக நடித்தார் இயக்குநர் பாரதிராஜா. அவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டாலும் தொடர்ந்து நடிக்காமல் இயக்குநராக மட்டுமே இருந்தார். அதன் பின்னர் ஒன்பது வருடங்கள் கழித்து விஷாலின் `பாண்டிய நாடு’ படத்திலிருந்து தொடர்ந்து கடந்த வெள்ளியன்று வெளியான அருள்நிதியின் `திருவின் குரல்’ வரை நடிகராகக் கலக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா, பல வருட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு அவரின் இயக்கத்தில் `மீண்டும் முதல் மரியாதை’ என்ற படம் வெளியானது. ஆனால், அந்தப் படமும் 2014-ம் வருடமே தொடங்கப்பட்டு பல்வேறு தயாரிப்புச் சிக்கல்களைச் சந்தித்து தாமதமாக வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது புதுமுகங்களின் கூட்டணியோடு தன் குலதெய்வம் கோயிலில் படப்பூஜையை ஆரம்பித்திருக்கும் பாரதிராஜாவிடம் பேசினேன்.
“நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்குகிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள். 1964ல்ல நடிக்கறதுக்காக முதல் முறையாக சென்னைக்கு வந்தேன். அப்போது கிடைக்காத வாய்ப்பு 80 வயதில் கிடைத்திருக்கிறது. இப்ப எல்லா படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் நடிப்பு என்பது வேறு. இயக்குவது என்பது வேறு. படம் இயக்காமல் இருக்கிறேனோ என்ற ஏக்கம் எனக்கு ஜாஸ்தியாகிடுச்சு. அதனாலதான் இப்ப இயக்குறேன்.
படத்தின் பெயர் ‘தாய்மை’. தாய் என்பவள் உண்மையானவள். ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள்னு இந்தப் படத்துல சொல்லப்போறேன். இன்னொரு விஷயம், இந்தப் படம் என் மண் சம்பந்தப்பட்டது. என் மக்கள் சார்ந்த வாழ்க்கை. அதனால என் குலதெய்வமான கருமாத்துரில் வைத்து இந்தப் படத்தை ஆரம்பிச்சிருக்கேன். இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கின்ற களம் இருக்காது. என் முந்தைய படங்களை விட இந்தப் படம் வேறொரு பரிமாணத்தில், கலவையில் இருக்கும். இதுவரைக்கும் பார்த்திராத பாரதிராஜாவை இதில் பார்க்கப்போகிறீர்கள்.
ஒரு தாய் கர்ப்பத்துல தன் குழந்தையை எப்படிச் சுமப்பாளோ அப்படி என் சிந்தனையில சுமந்துட்டு இருக்கேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வரும். உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வட்டார மொழியில் இது இருக்கும். வயதான ஒரு கிழவன் கதாபாத்திரத்தில் நான் நடிக்கறேன். மஹானா என்றொரு நடிகையை அறிமுகப்படுத்துகிறேன். 35, 60, 70 வயது காலகட்டங்களில் நான் நடித்திருக்கிறேன். அதைப் போல மஹானாவை 16, 30, 55 காலகட்ட வயதுகளில் பார்க்கலாம்.
கருமாத்தூர் கலைக்குழு பின்னணியோடு என் நண்பர்கள் இந்தப் படத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். எல்லாமே என் சொந்த பந்தமாய் இருக்காங்க. படம் பண்ணும் போது சந்தோஷமாக இருக்கும். அதுவும் என் பூமியில் என் சொந்தங்களோடு இணைந்து படம் பண்ணுவது இன்னும் சந்தோஷமாக இருக்கும்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.