சென்னை: Raghava Lawrence Rudhran (ராகவா லாரன்ஸின் ருத்ரன்) ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கியிருக்கும் ருத்ரன் படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். அவரது ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி நடன அமைப்பாளராக மாறியவர் லாரன்ஸ். அவர் அமைக்கும் நடன அசைவுகள் அனைவரையும் ஆட்டுவித்தது. குறிப்பாக விஜய்யுடன் அவர் திருமலை படத்தில் ஆடிய ஆட்டம் இன்றுவரை எனர்ஜி கொடுக்கக்கூடியது. பிரபுதேவாவுக்கு எப்படி ஒரு தனி ஸ்டைல் உருவானதோ அதேபோன்ற தனி ஸ்டைலை தனது நடனத்தில் உருவாக்கினார் ராகவா லாரன்ஸ்.
நடிகர் அவதாரம்: லாரன்ஸுக்கு நடிக்கும் ஆசை எப்போதுமே இருந்தது உண்டு. அதனால் சில பாடல்களில் தோன்றி நடனம் ஆடினார். அதன் பிறகு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் ஒரு தயாரிப்பாளிடம் சான்ஸ் கேட்க; அதற்கு அந்த தயாரிப்பாளர் லாரன்ஸின் நிறத்தை வைத்து பேசி அசிங்கப்படுத்தினார். பின்னர் ஒருவழியாக லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
இயக்குநர் அவதாரம்: தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அவதாரம் எடுத்தவர், தமிழில் முனி படம் மூலம் இயக்குநராக களமிறங்கினார். ராஜ்கிரண் உள்ளிட்டோ நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும், அதன் தொடர்ச்சியாக எடுத்த காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. அதன் மூலம் ஹிந்தியிலும் இயக்குநராக நுழைந்தார் ராகவா லாரன்ஸ்.
ருத்ரன்: லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. தற்போது அவர் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் இயக்கியிருக்கும் இந்தப் படமானது முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
லோகேஷ் அகனகராஜ் பாராட்டு: இந்நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்து வாழ்த்தியிருக்கிறார். அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், “ராகவா லாரன்ஸ் மாஸ்டர், கதிரேசன் உள்ளிட்ட ருத்ரன் பட குழுவினருக்கு ஆல் தி பெஸ்ட். படம் குறித்து நிறைய நல்ல விமர்சனங்களை கேட்கிறேன். வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் வாழ்த்துக்கு லாரன்ஸ் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ்: இதற்கிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருப்பதாகவும், அந்த படத்தை மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் லாரன்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் லோகேஷ் கனகராஜ் கதை, வசனத்தில் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம் லாரன்ஸ் நடிக்கும் படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.