சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது.
வருவாய் பற்றாக்குறை 7000 ஆயிரம் கோடி ரூபாய் குறையும். 4.16ல் இருந்து 3.08 சதவிகிதமாக வருவாய் பற்றாக்குறை குறையும், என்று அறிவித்தார்.
இது நம்பிக்கை அளிக்கும் செய்தி. இருப்பினும், உக்ரைன் போரால் பொருளாதார மீட்டெடுப்பு தடையாக உள்ளது. உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது.. வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்து இருக்கும். ஆனாலும் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிக பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது என்று அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட்டில் பொதுத்துத்துறை நிறுவனங்களுக்கு என்று பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
பொதுத்துறை நிறுவனங்கள்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்ய உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.
முதல் கட்டமாக ,
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாடு
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்
MTC, SETC மற்றும் TN மாநில போக்குவரத்து கழகங்கள்
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்
சென்னை மெட்ரோவாட்டர் மற்றும் TWAD வாரியம்
ஆகிய நிறுவனங்களுடன் இவர்கள் இணைந்து செயல்படுவார்கள். மொத்தமாக 50 பொதுத்துறை நிறுவனங்கள் இதற்காக பட்டியல் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் வருவாயை கடந்த 3 வருடங்களுக்கு ஆய்வு செய்து அவர்களின் செயல் திறன் எப்படி உள்ளது, எங்கே மாற்ற வேண்டும் என்று இவர்கள் ரிப்போர்ட் அளிப்பார்கள்.

அதோடு அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் அவர்களின் செயல்பாடு எப்படி உள்ளது அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் ஆய்வு செய்து ரிப்போர்ட் அளிப்பார்கள் .
உதாரணமாக தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் எப்படி செயல்பட்டு உள்ளது என்று ஆய்வு ரிப்போர்ட் அளிப்பார்கள். மேலும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் தனியாரோடு ஒப்பிடுகையில் ஏன் பின்னடைவை சந்தித்து உள்ளது என்றும் ரிப்போர்ட் அளிப்பார்கள்.
கடைசியாக அதை முன்னேற்றுவதற்கான வழிகளையும் இவர்கள் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே ஆய்வு பணிகளை தொடங்கி விட்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.