சென்னை: இலங்கையின் தற்போதைய திவால் நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார்.
தெற்காசியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜெர்னலிசம் (ஏசிஜே) சார்பில், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதர் மதன்ஜீத்சிங் நினைவு சொற்பொழிவு, இணையவழி வாயிலாக நேற்று நடைபெற்றது.
ஏசிஜே தலைவர் சசிகுமார் வரவேற்றார். மதன்ஜீத்சிங் அறக்கட்டளை (எம்எஸ்எஃப்) தலைவர் `இந்து’ என்.ராம் அறிமுக உரையாற்றினார்.
இதில், இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமரும், தெற்காசிய அறக்கட்டளையின் ஸ்ரீலங்கா கிளை முன்னாள் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கா “1975-ல் ஸ்ரீலங்கா” என்ற தலைப்பில் பேசியதாவது: இலங்கையில் 1975-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 50 ஆண்டுகால நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவது என்பது, மிகப் பெரிய சவாலான விஷயம்.
ஒரு காலத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்த நாடாக இலங்கை திகழ்ந்தது. கல்வியிலும், சமூக வளர்ச்சியிலும் மிகவும் முன்னேறி இருந்தது. ஆனால், காலப்போக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புகள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
தற்போதைய நிலை என்ன?: காலனி ஆதிக்கத்திடமிருந்து எங்களுடன் சுதந்திரம் பெற்ற, அண்டை நாடான இந்தியா இன்று எப்படி வளர்ந்துள்ளது? ஆனால், எங்கள் நாட்டின் தற்போதைய நிலை என்ன?
வருமானம் ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை முடங்கி கிடக்கிறது. தொழில் துறை சீரழிந்துவிட்டது. நிர்வாகம், காவல், நீதிமன்றம் என அரசுத் துறைகளில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கல்வி முறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்விதான் இவற்றுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மக்கள் பிரதிநிதிகளாக, அமைச்சர்களாக, முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர்களாக உள்ளனர். கொள்ளையிலும், கொலையிலும் ஈடுபட்டவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் கணக்கற்ற கொள்ளைகளே, இலங்கையின் தற்போதைய திவால் நிலைக்கு முக்கியக் காரணம்.
ஆட்சியாளர்கள் அதிகார வெறியிலும், கொள்ளையடிப்பதிலும்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, மக்கள் நலனை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன என்று கேட்கலாம்.
நாட்டு நலன் மீது அக்கறை கொள்ளக்கூடிய, நவீன, அறிவுப்பூர்வமான, அறநெறியும், நேர்மையும் கொண்ட தலைவர்கள் இப்போது இலங்கை நாட்டுக்குத் தேவைப்படுகிறார்கள்.
அடுத்த தலைமுறைக்குத் தேவையான இலங்கையைக் கட்டமைக்கும் தலைவர்கள் அவசியம். இந்தப் பணி மிகவும் கடினமானதுதான். இதில் இளைஞர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், நலம் விரும்பிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.
மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் அண்டை நாடுகளின் பேருதவியும் இலங்கையின் வளர்ச்சிக்கு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தெற்காசிய அறக்கட்டளையின் இந்திய கிளைத் தலைவர் மணி சங்கர் அய்யர், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். எம்எஸ்எஃப் முதன்மை அறங்காவலர் பிரான்சே மார்க்குட் வாழ்த்துரை வழங்கினார். ஏசிஜே டீன் நளினி ராஜன் நன்றி கூறினார்.