இளைஞரின் உயிரைப் பறித்த அதிக அளவு `அனஸ்தீசியா' – அலட்சிய தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை!

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு, முக்கியமாக அவர்களுக்கு சரியான அளவில் அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுக்கப்படும். இப்படி கொடுக்கப்படும் அனஸ்தீசியா ஒரு மில்லி அளவு அதிகமானாலும்கூட, பல்வேறு பக்கவிளைவுகள்… ஏன் சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்படும் அபாயம் உண்டு. இப்படியிருக்க, உத்தரப்பிரதேசத்தில் அனஸ்தீசியா அதிகமாக கொடுக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவமனையின் பதிவை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.

மருத்துவ சிகிச்சை

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று, பதோஹி மாவட்டத்தின் ராம்ராய்ப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு, வினய் திவாரி எனும் இளைஞர் வயிற்றுவலி என வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கணேஷ் யாதவ், அவரின் மனைவி டாக்டர் சுசீலா யாதவ் ஆகியோர், அவருக்கு குடல் அழற்சி எனக் கூறி அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்திருக்கின்றனர். வினய் திவாரி, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு முன்னதாகவே அவர் மயக்கமடைந்துவிட்டார்.

என்னவென்று பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் உடலில் அனஸ்தீசியா அதிகமாக இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சை செய்யவேண்டாம் முடிவுசெய்தனர். பின்னர் மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி அவரை அழைத்துச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறினர். குடும்பத்தினர் அவரைப் பார்த்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி (Chief Medical Officer) தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டனர் எனக் கூறி மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அறுவை சிகிச்சை

பின்னர் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு இதனை விசாரிக்க, அதிக அளவு அனஸ்தீசி கொடுக்கப்பட்டதே இளைஞரின் மரணத்துக்குக் காரணம் என்பது உறுதியானது. இந்த நிலையில், மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கவுரங் ரதி, மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதோடு மருத்துவமனை இயக்குநருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மருத்துவமனையின் மருத்துவச் சேவைக்குத் தடையும்விதித்தார். இன்னொருபக்கம், டாக்டர் கணேஷ் யாதவ் மற்றும் பிற ஊழியர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ஏ (சிகிச்சையில் அலட்சியத்தால் மரணம்) கீழ் போலீஸ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.