பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சீனாவின் குவாண்டன் மாகாணத்தில் டென்ஜன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கொரோனா பெருந்தொற்று பரவுலுக்கு பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் லக்கி ஓ டிரா என்ற முறையில் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும் என்றும், தோல்வியுற்றால் உணவு சப்ளை செய்யும் வெயிட்டர் வேலை செய்ய வேண்டும் என்றும் விளையாட்டில் இடம் பெற்று இருந்தது. எனினும் இந்த போட்டியில் பலரும் துணிச்சலுடன் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டில் பங்கேற்ற போட்டியாளர்களில், இந்த பரிசுக்குரிய அதிர்ஷ்டசாலியாக ஒருவர் ஆகியிருக்கிறார் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி அந்த நபருக்கு சம்பளமும் கொடுத்து, 365 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் தனக்கு அளிக்கப்பட்ட பரிசு உண்மை தானா என்று கேட்டு அவர் தெளிவுப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், அவருக்கு இந்த பரிசை நம்ப முடியவில்லை.

இப்படிப்பட்ட பரிசு தனது ஊழியர் வென்றுள்ளதை கேட்டு மகிழ்ச்சியில் திகைத்து போயிருக்கிறோம் என அந்த நிறுவனத்தின் முதலாளி கூறியிருக்கிறார். இதுபற்றி அந்நிறுவனத்தின் பெண் பணியாளர் ஷென் கூறுகையில், போட்டியில் வெற்றி பெற்ற நபரிடம் நாங்கள் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அவர் பரிசுக்கு பதில் பணம் பெற்றுக்கொள்ள விரும்புகிறாரா, அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்க போகிறாரா என்று அவரிடம் கேட்க இருக்கிறோம் என்று அந்த பெண் பணியாளர் கூறினார்.
இந்த செய்தியை அறிந்த பலரும், பரிசு பெற்ற நபருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.