கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீ பற்றியது. தொடர்ந்து ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்துறை ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீயை கட்டுப்படுத்த வனத்துறை, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைள எடுத்தும் பலனிக்கவில்லை.
இந்த சம்பவத்தால் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை முதல் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கேரளா மாநிலம் மலம்புழா அணையில் இருந்து நீர் எடுத்து தண்ணீரை தீயை அணைத்து வருகின்றனர்.
இந்தப் பணியை வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத் தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கையாக நான்கு முதல் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 20 முதல் 25 பேர் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.