சறுக்கிய பாஜக… கர்நாடகாவில் என்ன நடக்கிறது? காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்!

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தான் கர்நாடக அரசியலில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. ஆளுங்கட்சியின் மூத்த தலைவர், அதுவும் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சியில் இணைவது என்றால் சும்மாவா? இது பாஜகவிற்கு பலத்த அடியாக இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் இவர் ஹூப்ளி – தர்வாத் மத்திய சட்டமன்ற தொகுதியில் 2008, 2013, 2018 என தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

லிங்காயத்து சமூகம்

இதில் 2012 – 2013 காலகட்டத்தில் 305 நாட்கள் கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். இம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் லிங்காயத்தின் உட்பிரிவான பனாஜிகா சமூகத்தை சேர்ந்தவர். இதனால் லிங்காயத்து சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பும், வடக்கு கர்நாடகாவில் செல்வாக்கும் பெற்றவர். ஷெட்டரின் வெளியேற்றம் மேற்குறிப்பிட்ட பகுதியில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹூப்ளி – தர்வாத் தொகுதி

முன்னதாக ஹூப்ளி – தர்வாத் மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டுள்ளார். ஆனால் டெல்லி தலைமை சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர்
காங்கிரஸ்
மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார், சுர்ஜேவாலா, எம்.பி.பட்டீல், ஷாமனூர் சுவசங்கரப்பா உள்ளிட்டோரை பெங்களூருவில் நேற்று இரவு சந்தித்து பேசினார். இதனால் எதிர்க்கட்சியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது.

காங்கிரஸில் ஜெகதீஷ் ஷெட்டர்

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தன்னை இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் வேண்டுமென்றே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். பாஜக தற்போது ஒரு சிலரின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு அக்கட்சியில் இணைந்துள்ளேன் எனத் தெரிவித்தார். இதுபற்றி பதிலளித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெகதீஷ் ஷெட்டருக்கு அறிமுகம் தேவையில்லை.

கர்நாடக அரசியல்

அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இவர் தனித்து போட்டியிட்டு வென்றவர் மட்டுமல்ல, அதிகப்படியான இடங்களை கைப்பற்ற பெரிதும் உறுதுணையாக இருக்கக் கூடியவர். தற்போதைய சூழலில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு எந்தவித கோரிக்கைளும் இல்லை. எங்கள் கட்சியின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டே இணைந்திருக்கிறார். நம்முடைய நாடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அதை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். இம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிலும் ஓல்டு மைசூரு மண்டலம் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து விட்டால் பாஜக, காங்கிரஸ் என இருமுனைப் போட்டியாகவே களம் அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.