சென்னை, அண்ணாநகர், சாந்தி காலனியில் வசிக்கும் லோகேஷ் தேவ்பா என்பவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர், “என்னுடைய சொந்த ஊர் நேபால், டோட்டி ஹவுராடி ஆகும். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என்னுடைய அப்பா ஹாரிஷ் தேவ்பா, சொந்த ஊரில் வசித்து வருகிறார். என்னுடைய மூத்த அண்ணன் பெயர் பிரேம் தேவ்பா (30). அவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நோபால் டோட்டி, கோகுடாவைச் சேர்ந்த கமலா தேவ்பா (20) என்பவரைக் காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இரு குடும்பத்தினரும் பிரேம் தேவ்பா, கமலா தேவ்பா ஆகியோரின் காதலை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தோம்.
திருமணத்துக்குப் பிறகு என்னுடைய அண்ணன் பிரேம், தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்துவிட்டார். என்னுடைய அண்ணி கமலா அவரின் அம்மா வீட்டில் இருந்தார். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு அண்ணி கமலாவையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து வெவ்வேறு இடங்களில் தங்கி, வேலை பார்த்து வந்தார் பிரேம். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து வீட்டு வேலை செய்து வந்தார். பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களாக வானகரம் பகுதியில் காவலாளியாக வேலை செய்துவந்தார். நான் கடந்த 5 நாள்களுக்கு முன்பு என் அண்ணன் பிரேமுக்கு போன் செய்து பேசினேன். அப்போது அவர், அண்ணி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதோடு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
இந்த நிலையில் 16-ம் தேதி பிரேமுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் அண்ணி மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளி இறந்தநிலையிலும், அண்ணன் மின்விசிறியில் தூக்குமாட்டி இறந்து கிடப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. என்னுடைய அண்ணன், அண்ணியின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரவாயல் போலீஸார், கணவன், மனைவி இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இருவரின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் போலீஸார் பரிந்துரைத்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் செல்போன் அழைப்புகள், அவர்களின் உறவினர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.