தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.04.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் சார்பில் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகைமொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
அதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூ டியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.