தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது; வேறென்ன திருமண உதவி திட்டங்கள் இருக்கின்றன? தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ’தாலிக்கு தங்கம்’ எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதன்மூலம் ஒரு பவுன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பெண்களின் திருமணத்திற்கு மாநில அரசு வழங்கி வந்தது. ஆனால் இந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் என்று மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

அரசு பள்ளி மாணவிகள்

இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு உயர் கல்வியை தொடர மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், தாலிக்கு தங்கம் திட்டம் திருத்தப்பட்டு புதுமைப் பெண் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டம்

இதனால் இனி இந்த திட்டம் செயல்படுத்தப்படாது எனத் தெரிகிறது. எனவே வேறு என்னென்ன திருமண உதவி திட்டங்கள் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி விரிவான தகவல்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.திருமணத்தின் போது மணமகள் 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும்.கலப்பு திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகளில் ஒருவர் முற்பட்ட வகுப்பு, மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

மறுமணத்தின் போது மணமகளின் குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்.வருமான உச்ச வரம்பு இல்லை.விதவைச் சான்று, மறுமணம் செய்வதற்கான திருமண அழைப்பிதழ் மற்றும் வயதுச் சான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.மறுமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவை சான்று, வருமான சான்று தேவையில்லை.மணப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்

ஆதரவற்ற பெண்ணாக இருக்க வேண்டும்.ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.திருமணத்தின் போது மணப்பெண் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.திருமணம் நடைபெறுவதற்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.