ஈரோடு: தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க, ஓராண்டாய் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. டாப்சிலிப் பகுதியில் இருந்து 4-வது முறையாக அழைத்து வரப்பட்ட இரு கும்கி யானைகள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறும், கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை, விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. கருப்பன் யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர். கருப்பன் யானையைப் பிடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இந்த கும்கி யானைகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தன.
சில நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த கருப்பன் யானை, மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து, அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகள் உதவியோடு, கருப்பன் யானையை சுற்றி வளைத்த மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். நான்கு முறை மயக்க ஊசி செலுத்தியும், கருப்பன் யானை மயங்கம் அடையாமல் வனப்பகுதிக்கு தப்பியது.
இதன்பின், கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன. இம்முறையும் கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் மோடி முதுமலை வருகையை ஒட்டி கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கருப்பன் யானை பயிர்களை சேதப்படுத்தத் தொடங்கியது. இம்முறை கருப்பன் யானையைப் பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி என்ற இரு கும்கி யானைகள் தாளவாடிக்கு கொண்டு வரப்பட்டன.
கருப்பன் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தாளவாடியை அடுத்த மகாராஜன்புரம் பகுதியில் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை, அதிகாலை வரை கரும்பு தோட்டத்தில் இருந்துவிட்டு, அதிகாலையில் வனத்திற்கு திரும்புவதை கண்காணித்து வந்தனர். நேற்று இரவு கரும்புத் தோட்டத்திற்கு வந்த யானைக்கு, மருத்துவர் குழுவினர் மயக்க ஊசியை செலுத்தினர். இதன் மூலம் யானையின் செயல்பாடு கட்டுக்கு வந்த நிலையில் அதன் கழுத்து, கால்கள் கயிறுகளால் பிணைக்கப்பட்டன. இதனைத் தொடர்து டாப்சிலிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட மாரியப்பன், சின்னத்தம்பி ஆகிய இரு கும்கி யானைகள் உதவியுடன், 2 மணி நேரம் போராடி, கருப்பன் யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர்.
கடந்த ஓராண்டாக பயிர்களைச் சேதப்படுத்தியும், உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தியும் வந்த கருப்பன் யானை பிடிபட்டதால் தாளவாடி சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிடிபட்ட கருப்பன் யானையை வேறு வனப்பகுதியில் விடுவதா அல்லது யானைகள் முகாமிற்கு அனுப்புவதா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.