ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காரணம் காட்டி இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆனால் காவல்துறையின் அனுமதியை எதிர்த்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து நவம்பர் மாதம் 6ம் தேதியன்று பேரணியை நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியது. தமிழ்நாடு முழுவதும் அனுமதி கோரியிருந்த நிலையில், மூன்று மாவட்டங்களில் மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு காவல்துறை அவமதித்தவிட்டதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமணை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மட்டுமல்லாது உள்ளரங்கு கூட்டம் நடத்த திட்டமிட்ட இடங்களில் கூட்டங்கள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இதையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கவில்லை. என இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது. தமிழ்நாடு அரசும் பேரணிக்கு அனுமதி மறுக்கிறோம் என்று மனு தாக்கல் செய்தது. ஆனால் நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து மாநிலம் முழுவதும் பேரணி நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து நேற்று (ஏப்.16) தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியை நடத்தினர். சென்னை கொரட்டூரில் தொடங்கிய பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றிருந்தார். அதேபோல கோவையில் நடைபெற்ற பேரணியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். இதே போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் பேரணி திட்டமிட்டவாறு நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலிருந்து மாலை தொடங்கிய பேரணி மீன் மார்க்கெட், ரோமன் சர்ச் பகுதி வழியாக சுற்றிக்கொண்டு மீண்டும் அரண்மனை பகுதிக்கே வந்து சேர்ந்தது. இந்த பேரணிக்கு இஸ்லாமியர் ஒருவர் மலர் தூவி வரவேற்பு அளித்திருந்தார். அதேபோல பேரணிக்கு பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். இந்த பேரணியின்போது சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தரணி முருகேசனின் ஆதரவாளர்கள் சிலர் பேரணிக்கு தொடர்பில்லாத இரண்டு பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பேரணி தொடங்கியதிலிருந்து தரணி முருகேசனை இவர் இரண்டு பேரும் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தரணி முருகனின் ஆதரவாளர்கள் இவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் முன்னுக்கு பின் முரணான பதிலளித்ததால் அவர்கள் மர்ம நபர்கள் இரண்டு பேரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கூலிப்படையில் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ராமநாதரபும் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவரின் தூண்டுதலின் பேரில்தான் இவர்கள் தரணி முருகேசனை நோட்டம் விட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னாள் பாஜக தலைவர் தூண்டுதலின் பேரில் தற்போதைய பாஜக தலைவருக்கு ஸ்கெட்ச் போட வந்த நபர்கள் வசமாக சிக்கியுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.