மங்களூரு-
பெல்தங்கடியில் ஒரேநேரத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதனால் இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் கார்களின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
போக்குவரத்து நெரிசல்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் ஹரீஷ் பூஞ்சா. இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரக்ஷித் சிவராம் களம் காண்கிறார். நேற்று இவர்கள் இருவரும் காலை 10.30 மணிக்கு ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். இருவரும் தனித்தனியாக கட்சி தொண்டர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இருவரும் ஒரே நேரத்தில் வந்ததால் பெல்தங்கடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பரபரப்பும் உண்டானது. ஒரு கட்டத்தில் இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கைகலப்பாகவும் மாறியது. இதனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
கார்களின் கண்ணாடிகள் சேதம்
இந்த சந்தர்ப்பத்தில் ஒருசில தொண்டர்களை கற்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசினர். இந்த சம்பவத்தால் கார்களின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. அதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதையடுத்து வேட்பாளர்கள் ஹரீஷ் பூஞ்சா மற்றும் ரக்ஷித் சிவராம் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தனித்தனியாக தங்களது கார்களில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. இதன்காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.