`போட்டியில் முதல் பரிசு, சம்பளத்துடன் ஒரு வருடம் விடுமுறை’ – ஊழியரை ஆச்சர்யப்படுத்திய சீன நிறுவனம்

சீனாவின் குவாண்டன் மாகாணத்தில் டென்ஜன் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் ஆண்டு விழாவில், ஊழியர்களுக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, அதாவது மூன்று வருடங்கள் கழித்து அந்நிறுவனத்தின் ஆண்டு விழா நடத்தப்பட்டதால் மிகவும் கோலாகலமாக இதை கொண்டாட முடிவு செய்தனர்.

இதனையொட்டி ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் விருந்து உண்ணலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது அல்ல ஆச்சர்யம். இந்நிகழ்வில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குத் தருவதாகக் கூறப்பட்ட பரிசுதான், உலகில் உள்ள அனைத்து ஊழியர்களையும் ஆச்சர்யப்பட, ஏக்கப்பட, பொறாமைப்பட வைத்துள்ளது.

அலுவலகம்

அதாவது இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ஊழியருக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தோல்வியடைந்தால் அதே ஹோட்டலில் ஒருநாள் வெயிட்டராக வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு பலரும் மிகவும் துணிச்சலுடன் அந்தப் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறார். அதன்படி அந்த ஊழியருக்கு சம்பளமும் கொடுத்து 365 நாள்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தனக்கு அளிக்கப்பட்ட பரிசு உண்மையா என அவர் ஆச்சர்யத்தில் உள்ளார். இதனை தெளிவுபடுத்த அலுவலகத்தில் விசாரிப்பது, தன் நண்பர்களிடம் விசாரிப்பது எனச் செய்து வருகிறார். தனக்குக் கிடைத்துள்ள பரிசை நம்பமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அந்நிறுவனத்தின் ஊழியர் ஷென் கூறுகையில், “இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவரை தவிர மற்றவர்களுக்கு சில நாள்கள் விடுமுறை, வருடத்தில் சில சலுகைகள் எனச் சிறிய பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் முதல் பரிசை நம்பமுடியவில்லை.

விடுமுறை

வெற்றியாளர் ஒரு நிர்வாகப் பதவியை வகிக்கிறார், அதனால் அவருக்கு வருடம் முழுவதும் விடுமுறை அளிப்பது சாத்தியமில்லை. அவர் தன் பரிசை அப்படியே ஏற்றுக்கொள்கிறாரா, அல்லது அதற்கு பதில் பணமாக பெற்றுக்கொள்கிறாரா என்பது தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

அந்த ஊழியர் பரிசு பெறும் வீடியோ சீன சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஒரு வருடம் வரை விடுப்பில் இருந்தால் அந்த ஊழியர் தன் வேலையுடனான தொடர்பை இழக்க நேரிடும். நிறுவனம் தன் பணிச் சுமையை சமாளிக்க வேறு ஒருவரை வேலைக்கு எடுக்க நேரிடம். அவர் தன் விடுமுறை முடிந்து வரும்போது அவர் அந்நிறுவனத்துக்குத் தேவையில்லாதவராக இருக்க நேரலாம்” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.