இம்பால்: மணிப்பூர் முதல்வருக்கு எதிராக டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் முகாமிட்டிருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சார்பில் பிரேன் சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு எதிராக அவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க முகாமிட்டுள்ளனர்.
பிரச்னை என்ன?: ஏப்ரல் 13ல் மணிப்பூர் முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருந்த ஹீரோக் தொகுதி பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங், அப்பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து இன்று, மணிப்பூர் சுற்றுலா கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து லாங்தாபால் தொகுதி எம்எல்ஏ கரம் ஷியாம் தனது சுற்றுலா கழக பதவியை ராஜினாமா செய்தார். கரம் ஷியாம் எழுதிய ராஜினாமா கடிதத்தில், “மணிப்பூர் சுற்றுலா கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன், ஏனெனில் எனக்கு தலைவராக எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
டிசம்பரில் அவர் பதவிக்கு நியமிக்கப்பட்டாலும், அவருக்கு இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி விலகிய ஷியாம் அதோடு நிற்கவில்லை. “ஒரு தலைவர் என்பர் தன்னை பின்தொடர்பவர்களுக்கு நேர்மையுடனும் இருக்க வேண்டும், மாறாக அச்சுறுத்தக் கூடாது. அச்சுறுத்தல்கள் அடிக்கடி ஏற்பட்டால், கிளர்ச்சி வெடிக்கும்.
மணிப்பூர் ஊழலற்ற மாநிலமாக மாறுகிறது, ஆனால், இங்கு ஊழல் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மட்டுமே தெரியும்” என்றும் கூறி மணிப்பூர் பாஜக தலைமையை விமர்சித்திருக்கிறார். இந்த இரு ராஜினாமாக்கள் தொடர்ச்சியாக இப்போது டெல்லி முகாம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் முகாமிட்டுள்ள 12 எம்எல்ஏக்களும் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனம் குக்கி சமூகம். மணிப்பூர் பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் இச்சமூகத்தினர் இபோபி சிங் வழிநடத்திய முந்தைய அரசாங்கத்தின்போதும் பல பிரச்சனைகளை அடுக்கி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இப்போது, பிரேன் சிங் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்க முக்கிய காரணம், பிரேன் சிங் அரசு சமீபத்தில் குக்கி கிளர்ச்சிக் குழுக்கள் உடனான உடன்படிக்கையை நிறுத்தியதுதான். குக்கி கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. கிளர்ச்சிக் குழுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு நிறுத்தியதால் மலைப்பகுதியில் வசிக்கும் குக்கி இன மக்கள் சிக்கலை சந்தித்துவருகின்றனர் என்பது அதிருப்தி எம்எல்ஏக்களின் முக்கிய குற்றச்சாட்டு.
இவற்றை சரிசெய்வதோடு முதல்வரை மாற்ற வேண்டும் என்றும், மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளோடு பாஜக மத்தியத் தலைமையை அணுகியுள்ளது அதிருப்தி தரப்பு. பிரேன் சிங் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இதை குறிவைத்து குக்கி சமூக எம்எல்ஏக்கள் தற்போதையை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக எதிர்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தேசியத் தலைமையால் மணிப்பூர் மற்றும் வடகிழக்கில் பாஜக நிலைபெற்றுள்ளது, ஆனால் மாநில பாஜக மற்றும் மாநில அரசின் தலைமையால் நாங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கிறோம். மணிப்பூரில் உள்ள தலைமை ஜனநாயகமானது அல்ல, அது முடியாட்சியைப் போன்றது.
தங்கள் பகுதியில் வளர்ச்சி கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியால் பாஜகவில் இணைந்தோம். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. 2024 தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
பிரச்சனைகளை சரிசெய்ய அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜக மத்திய தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.