செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆண் குரங்கு ஒன்று துரத்தி துரத்தி வாகன ஓட்டிகளை கடித்து தாக்கும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதூர் கிராமம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகளில் அதிகமான குரங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது கிராமத்திற்குள் உணவு தேடி வருவது வழக்கம்.
அந்த வகையில் வழக்கம் போல் சில குரங்குகள் உணவு தேடி கிராமத்திற்குள் வந்தன. அப்போது ஒரு குரங்கு குடும்பத்தில் இருந்த பெண் குரங்கும் அதன் குட்டி குரங்கும் திருக்கழுக்குன்றம்- மதுராந்தகம் சாலையில் உணவு தேடி வந்தன.
அப்போது அவற்றின் மீது வாகனம் மோதியதில் அந்த இரு குரங்குகளும் பலத்த காயமடைந்து இறந்துவிட்டன. வாகன ஓட்டிகள்தான் தன் மனைவியையும் தன் குழந்தையையும் கொலை செய்துவிட்டதாக நினைத்த ஆண் குரங்கு, தன் குடும்பத்தினரை இழந்ததற்கு பழி தீர்க்கும் விதமாக சாலையில் வாகனத்தில் செல்வோரை மட்டுமே துரத்தி துரத்தி கடிக்க வந்தது.
குரங்கு துரத்துவதால் அதற்காக தப்பியோடும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை குரங்கு கடித்ததில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். சாலையில் நடந்து செல்வோரை அந்த குரங்கு எதுவும் செய்யவில்லையாம். மாறாக இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை மட்டுமே ஆண் குரங்கு துரத்தி கடிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
வாகன ஓட்டிகளை கடிக்கும் இந்த ஆண் குரங்கை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் கொண்டு சென்றுவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாய் குரங்கும் குட்டி குரங்கும் இறந்து 10 நாட்களுக்கு மேலான நிலையிலும் ஆண் குரங்கின் ஆவேசம் அடங்கவில்லை. மனிதர்களுக்கு மட்டும்தானா மனைவி, குழந்தை என்ற பாசம் இருக்கும்? விலங்குகளுக்கும் அந்த பாசம், நேசம் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
ஆனால் குரங்குகள் நடமாடும் பகுதியில் வாகன ஓட்டிகள் சற்று வேகம் குறைந்து போயிருந்தால் இந்த ஆண் குரங்கு தனது மனைவியையும் குட்டியையும் இழந்திருக்காது. குரங்கு அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காராக இருந்தாலும் அதன் கதவு வரை ஜம்ப் செய்கிறது. அது போல் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கால்களை பதம் பார்க்கும் விதமாக குறி வைக்கிறது.
இதற்கு பயந்து கொண்டு இரு சக்கர ஓட்டிகள் அந்த குரங்கை பார்த்ததும் காலை மேலே தூக்கி வேகமாக சென்றுவிடுகிறார்கள். குரங்குக்கு பயந்து அஞ்சி முட்டு சந்துக்குள் சிக்குவோர் குரங்கிடம் கடி வாங்கி கொள்கிறார்கள். ஆயினும் 10 நாட்களாகவே தனது குடும்பத்தை அழித்தவர்களை பழி வாங்கியே தீர வேண்டும் என அந்த குரங்கு கங்கணம் கட்டிக் கொண்டு வெறிகொண்டு இருப்பது நன்றாகவே தெரிகிறது.