தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் (17-04-2023) மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பெண் குழந்தைகள் பயனடைய, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.
- குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ₹14.85 கோடி மதிப்பில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.
- சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடி செலவில் 17,312 அரசுப்பள்ளிகளுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கூடுதலாக 37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.
- ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியினை கண்காணித்து நிகழ்நேர பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 17.53 கோடி ரூபாய் செலவில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.
- முன்னேற விழையும் மாவட்டஙக்ளான இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கபப்டுத்துவதற்கு எல்.இ.டி தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு மையத்திற்கு 25,000 ரூபாய் வீதம் 1.75 கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.
- நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 9,088 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர், தொப்பி, காலுறை வழங்குவதோடு 608 மையங்களுக்கு தரை விரிப்பான் 80 இலட்சம் ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.
- சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என கூறினார்