“தென்திசையைக் குறிக்கும் வார்த்தை ‘யா’ என்று திருமந்திரத்தில் சான்றுகள் உள்ளன. ஆய்வாளர்கள் – மீன், பாண்டியர்கள் என வேறு பல பொருள்களும் கூறுகிறார்கள். கடந்த 7-ம் நூற்றாண்டில் தெற்கு திசையில் வாழ்ந்த பாண்டிய இளவரசர் ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றையும், எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்ட புனைகதையாக ‘யாத்திசை’ உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.
சரித்திரப் படமாக உருவாகியுள்ள ‘யாத்திசை’யின் டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகங்களே நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். அரசர் காலத்துப் பின்னணியில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தரணி ராசேந்திரனிடம் பேசினேன்…
அறிமுக இயக்குநராக இந்த முயற்சி எப்படிச் சாத்தியமானது?
“நான் பொறியியல் பட்டதாரி. சினிமா ஆர்வம் காரணமாகப் படித்து முடித்தவுடன் குறும்படங்களை இயக்க தொடங்கிவிட்டேன். பிறகு ‘ஞானச்செருக்கு’ எனும் திரைப்படத்தைக் கூட்டுத் திரள் (Crowd Funding) முறையில் இயக்கி முடித்தேன். அது சர்வதேச அளவில் 40 விருதுகளைப் பெற்றது. 2019 மார்ச் மாதம் வெளியாக இருந்த அத்திரைப்படம் கொரோனா ஊரடங்கின் காரணமாகத் தள்ளிப்போனது. அதற்கிடையேதான் ‘யாத்திசை’ வாய்ப்பு கிடைத்தது. இதன் நடுவே கிடைத்த நேரத்தில் ‘லிபரேட்கள்’, ‘சாண்ட்விட்ச்’, ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’, ‘கடவுளைத் தரிசித்த கதைகள்’ என நான்கு புத்தகங்களை எழுதியுள்ளேன். ஒரு படம், ஒரு நாவல் என மாற்றி மாற்றிச் செயல்பட எண்ணுகிறேன். எழுத்தின் மீதுள்ள காதலே, படம் இயக்குவதற்கான ஆற்றலையும் அமைதியையும் தருகிறது. ‘யாத்திசை’யைக் கதையாகச் சொல்லும்போது யாரும் நம்பவில்லை. என் தயாரிப்பாளர் நம்பினார். முழுமையாகக் கதையைக் கூட கேட்காமல், படத்தைத் தயாரிக்கச் சம்மதித்தார். அந்த நம்பிக்கையில் படம் உருவானது.”
‘யாத்திசை’ உருவான விதம் குறித்து?
“முறையான திட்டமிடல்தான் இந்தக் கதையைக் காட்சி வடிவமாக மாற்றியுள்ளது என்பேன். படத்தில் வேலை செய்த அனைவரும் புதியவர்கள் என்றாலும் குழுவாக உழைத்தோம். அனைவரும் இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஓடினோம். அந்த வெறியே படம் சிறப்பாக வந்ததற்குக் காரணம். படத்தின் முன்தயாரிப்பு பணிக்கு மட்டும் ஒன்றரை ஆண்டுகள் ஆனது. இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பை நடத்தினோம். தேனி, கம்பம், தஞ்சாவூர், உடையார்பாளையம் மற்றும் செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். குறிஞ்சி, மருதம், பாலை, முல்லை ஆகிய பகுதிகளை மையப்படுத்திப் படம் பிடித்துள்ளோம். வரலாற்றுக்கு எவ்வளவு நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதை யோசித்துச் செய்திருக்கிறோம்.
புனைவாக இருந்தாலும் வாழ்வியல் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திச் செய்திருக்கிறோம். உதாரணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் ஆடைகள் கிடையாது. ஆனால் நிர்வாணமாகக் காட்டினால் சென்சார் பிரச்னை வரும். வரலாற்றுச் சான்றுகள்படி அப்போது ஆடைகளுக்குப் பதிலாக நகைகளைப் பயன்படுத்தியதை அறிந்தோம். ஆகையால் நகைகளையே ஆடைகளாக வடிவமைத்தோம். மற்ற படங்கள் போல் வட மாநிலங்களுக்குச் செல்லாமல் இங்கே உள்ள கோயில்களை உதாரணமாக வைத்து கட்டடங்களை உருவாக்கினோம். உதாரணத்துக்கு இங்கே தூண்கள் வைத்தே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இப்படி இருக்காது. இங்கே இருந்த அரண்மனைகளுக்கும் அங்கே இருக்கும் அரண்மனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திரையில் பார்க்கும்போது அந்த மெனக்கெடலின் அனுபவங்களை நிச்சயம் உணர்வீர்கள்.”
டிரெய்லரில் பயன்படுத்திய தமிழ் மொழி ஆரம்பத்தில் புரிவதாகவும், பின்பு சற்று கடினமாகவும் இருந்ததே?
“படத்தின் மொழிக்குப் பெரிதும் மெனக்கெட்டு உள்ளோம். 30 நிமிட பழங்குடிக் காட்சிக்கு, 7-ம் நூற்றாண்டு இலக்கியங்களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரையாடலாக மாற்றியுள்ளோம். அந்தக் காட்சிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் சப்டைட்டில் போடத் திட்டமிட்டுள்ளோம். நம்மிடம் வழக்கில் இருந்த அந்தச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்யும் ஆவணமாக இதை எண்ணுகிறோம். புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பலமான காட்சி வடிவமைப்பு இருப்பதால் துணிந்து இந்த முடிவினை எடுத்துள்ளோம்.”
படத்தின் சண்டைக் காட்சிகளில் ஆயுதங்கள் வித்தியாசமாக இருக்கின்றனவே?
“ஆயுதங்களைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தின் நிலத்தைப் பொறுத்தே அமைந்தன. பாலை நிலத்து மனிதன் என்றால் அவனுடைய அடிப்படை வேட்டையாடல். வேட்டையாடல் மூலமே அவனது தேவைகள் நிறைவேறும். வேட்டையாடிய விலங்குகளின் தோல்கள் ஆடைகளாகவும், எலும்புகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டுள்ளன. ஆகவே எங்கள் திரைப்படத்திலும் அதைப் பின்பற்ற முடிவு செய்தோம். அதே போல பாண்டியர்களை எடுத்துக் கொண்டால் வளமானவர்கள். உலோகங்களைப் பயன்படுத்துவார்கள். அவர்களது ஆயுதங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது அரசர் காலத்திலும் இருந்தது என்பதைக் காட்ட இரண்டு சந்தைகளை உருவாகியுள்ளோம். ஆடைகள், நகைகள் ஆகியவற்றை பழங்காலச் சிலைகளிலிருந்து உதாரணமாக எடுத்துக்கொண்டு நாங்களே செய்து முடித்தோம்.”
“படத்தின் முன்னோட்டத்தில் அதிகாரம், ஒடுக்குமுறை போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. படைப்பில் அரசியல் பேசப்படுமா?”
“மன்னராட்சியிலும் சரி, தற்கால ஆட்சியிலும் சரி, ஒடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்தை நோக்கி நகர்கிறார்கள். அந்த அதிகாரம் கிடைத்த பின் அதைத் தக்கவைக்க மீண்டும் யாரையாவது ஒடுக்குகிறார்கள். சமத்துவத்தை நோக்கி செல்ல மறந்துவிடுகிறார்கள். அதைத்தான் செய்ய வேண்டுமென நான் எண்ணுகிறேன். ‘யாத்திசை’ இந்த அரசியலைத்தான் பேசியுள்ளது. ‘நவகண்டம்’ என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை பலி, தேவரடியாரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை கதையின் ஓட்டத்தில் பேசப்பட்டுள்ளன.”
இதுவரை வந்த மன்னர் காலக் கதைகளிலிருந்து ‘யாத்திசை’ திரைப்படம் எந்த இடத்தில் மாறுபடுகிறது?
“நிச்சயமாக மிகைப்படுத்தல் என்பது இருக்காது. யதார்த்தத்தை இதில் பதிவு செய்ய முற்பட்டு இருக்கிறோம். நிறைய ஆய்வாளர்களைச் சந்தித்து, புத்தகங்களைப் படித்து, எது வரலாற்றோடு இயைந்து வருகிறதோ அதைக் கடுமையான உழைப்பைக் கொட்டி படமாக்கியுள்ளோம். ஒவ்வொரு விஷயத்தையும் உளப்பூர்வமாக ரசித்து ரசித்துச் செய்துள்ளோம். மக்கள் இம்மாதிரியான முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நிச்சயமாக இது புது அனுபவத்தைத் தரும்.”
ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு சக்ரவர்த்தி இசையமைப்பாளராகவும், யதிசாய், அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மறுவாரமே சோழர்களின் வாழ்வை புனைகதையாகச் சொல்லும் `பொன்னியின் செல்வன்-2′ வெளிவருவதால், பாண்டியர்களின் புனைகதையைச் சொல்லவரும் `யாத்திசை’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.