சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக் இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் மார்ச் 29-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.