விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், கம்மாப்பட்டியைச் சேர்ந்த தாமரைச்செல்வி என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், தாமரைச்செல்வி இரண்டாம் முறையாக கருத்தரித்திருக்கிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு, சிரஞ்சீவி வெளிநாட்டுக்குச் வேலைக்கு சென்றுவிட்டதால் தாமரைச்செல்வி அவருடைய தாயின் பராமரிப்பில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி வியாழக்கிழமை மாலை தாமரைச்செல்விக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்,108 ஆம்புலன்ஸ் மூலமாக, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இதையடுத்து பிரசவத்திற்கு பின்னாலான மருத்துவச் சிகிச்சைக்காக 3 நாள்கள் மருத்துவர்கள் கவனிப்பில் இருந்த தாமரைச்செல்வி கடந்த ஞாயிற்றுக் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
வீட்டுக்குவந்த தாமரைச்செல்விக்கு திடீரென அளவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக வயிற்றுவலி அதிகமாகியதுடன், அடிவயிற்றில் காயங்கள் உருவாகி துர்நாற்றம் வந்திருக்கிறது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யக் கூறியிருக்கின்றனர்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர், பிரசவம் நடந்த மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தாமரைச்செல்வி, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று அடிவயிற்றில் தனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களைக்காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார். தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரசவம் நடந்த போது ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக பிறப்புறுப்பின் வாய் பகுதிக்குள் வைக்கப்பட்ட பஞ்சு அகற்றப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ரத்தம் பஞ்சில் நன்றாக ஊறியதால், உடலுக்கு பல்வேறு தொந்தரவுகளும், காயங்களும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையறிந்த அவரின் உறவினர்கள் ரத்தம் தோய்ந்த பஞ்சை புகைப்படம் எடுத்ததுடன், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள், “மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் அலட்சியம் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் உரிய விசாரணை நடத்தவேண்டும். தவறு செய்த மருத்துவமனை ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் முருகவேல், “ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, செய்யப்பட்ட சிகிச்சையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக இன்று என்னுடைய தலைமையில் மருத்துவர் குழுவினர் விசாரணை நடத்த இருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த மருத்துவர்கள், பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னதாக எந்த பதிலும் தெரிவிக்க இயலாது” என்றார்.