16 கி.மீ., துாரத்தில் இருந்தும் தாக்கலாம் புதிய பீரங்கியை வடிமைத்துள்ளது சீனா * செயற்கை நுண்ணறிவில் புதிய முயற்சி| China has developed a new cannon that can attack from a distance of 16 km * New effort in artificial intelligence

பீஜிங், ஒரு குறிப்பிட்ட இலக்கை, ௧௬ கி.மீ., துாரத்தில் இருந்து தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பீரங்கிகளை, சீன ராணுவம் வடிவமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த பீரங்கிகள் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

‘ஆர்டிபிஷீயல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது பல்வேறு துறைகளில் புதிய வசதிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நம் அண்டை நாடான சீனா, இந்த செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பீரங்கி மற்றும் பீரங்கி குண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலையில் இந்தப் பணி துவங்கியது. பீஜிங் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள், சீன ராணுவத்துடன் இணைந்து இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பீரங்கிகளில் இருந்து, ௩௩௦ அடி தூரத்தில் உள்ள இலக்குகள் வரை தான் தாக்க முடியும். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சில நாடுகளிடம், கம்ப்யூட்டரில் முன்னதாகவே திட்டமிட்டு குண்டுகளை ஏவும் பீரங்கிகள் உள்ளன.

இவையும், சில குறிப்பிட்ட அடி துாரத்தில் உள்ள இலக்குகளை மட்டுமே தாக்க முடியும்.

அதே நேரத்தில், காற்றின் வேகம், இடையில் உள்ள தடைகள் உள்ளிட்ட சில பிரச்னைகள் இதில் உள்ளன. அதுபோல, மிகத் துல்லியமாகவும் இதன் தாக்குதல் இல்லை.

இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு வாயிலாக தாக்கக் கூடிய பீரங்கிகளை வடிவமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இதன் பரிசோதனை நடத்தப்பட்டு, அது வெற்றிகரமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

அதாவது, ௧௬ கி.மீ., தொலைவில் இருந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கை தாக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

‘நகரங்களின் மீது தாக்குதல் நடத்த, ஒரு கட்டடத்தில் பதுங்கியிருக்கும் எதிரிகளை தாக்க இந்த புதிய முறை மிகவும் உதவியாக இருக்கும்’ என, இதை வடிவமைத்துள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பலியாவது தடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகளைவிட, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பீரங்கிகள் மற்றும் அதன் குண்டுகள் தயாரிப்பதற்கான செலவும் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.