மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், சரத்குமார் என முன்னனி பிரபலங்கள் பலர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியானது.
நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்திருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆகவிருந்த சமயத்தில் ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கார்த்தி வந்தியத் தேவன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் த்ரிஷா குந்தவை எனவும் தங்களது பெயர்களை மாற்றி இருந்தனர்.
தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில் அதனை புரோமோட் செய்யும் விதமாக மீண்டும் ட்விட்டரில் நடிகை த்ரிஷா `குந்தவை’ என்றும் நடிகர் ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் என்றும் பெயரை மாற்றியுள்ளனர். குந்தவை, அருண்மொழி வர்மன் என தங்களது பெயர்களை மாற்றியதைத் தொடர்ந்து அவர்களின் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் த்ரிஷா மீண்டும் Trish என தனது பெயரை மாற்றி இருக்கிறார். இருப்பினும் அவருக்கு ப்ளூ டிக் வழங்கப்படவில்லை. ஜெயம் ரவி பெயரை மாற்றாமல் அருண்மொழி வர்மன் என்றே வைத்திருக்கிறார். ட்விட்டரின் விதிகளின் படி ப்ளு டிக் பெறுவதற்கு தகுந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆவணங்களில் இல்லாத பெயரை மாற்றினால் ப்ளு டிக் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.