Thangalaan – தங்கலான் படத்தின் கதை என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்

சென்னை: Thangalaan (தங்கலான்) பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் தங்கலான் படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியிருக்கிறார். அதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்து தங்கலான் தமிழின் பெருமைமிகு படமாக இருக்கும் என கூறிவருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.

தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

தங்கலான் மேக்கிங்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஹீரோ சியான் விக்ரம் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை இன்று பா.இரஞ்சித் வெளியிட்டார். அதனைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் ஆச்சரியத்தில் வாய் அடைத்து போயிருக்கிறது. அதை பார்த்த பலரும் நிச்சயம் இந்தப் படம் தமிழின் பெருமைமிகு படமாக இருக்கும் என ஆரூடம் கூறிவருகின்றனர்.

விக்ரமுக்கு கண்டிப்பாக ஹிட்: விக்ரம் சமீபகாலமகா ஹிட்டுக்கு திணறிக்கொண்டிருக்கிறார். சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தாலும் அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அவர் பா.இரஞ்சித்துடன் இணைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது படம் வேறு ரகத்தில் உருவாவது உறுதியாகிறது. எனவே இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட் படமாக அமையும் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Dhananjeyan Talks About Thangalaan Movie

தங்கலான் கதை என்ன?: இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தங்கலான் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், “கேஜிஎஃப் தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கைதான் தங்கலான் படத்தின் மையக்கரு. சார்பட்டா பரம்பரை படத்தில் பா.இரஞ்சித் 1980களை நேர்த்தியாக காட்டியிருந்தார். அதே நேர்த்தியை தங்கலான் படத்திலும் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இரஞ்சித்தின் கனவு படம்: தங்கலான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் கனவு படம். ஒரு மனிதனின் 70 வருட காலகட்டத்தை தங்கலான் நமக்கு காட்டவிருக்கிறது. அதாவது 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தை தங்கலான் நமக்கு காட்டும். கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது, அதில் தங்கலானின் பங்கு என்ன என்பதை இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.