விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் `தங்கலான்’ மேக்கிங் வீடியோவில் விக்ரமின் அசாதாரண உழைப்பு பலரையும் வியக்க வைத்திருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிகிடக்கிறது என்பதால், `தங்கலான்’ நிலவரம் குறித்து விசாரித்தேன்.
ஞானவேல்ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். `நட்சத்திரம் நகர்கிறது’ கிஷோர் குமார், இதற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
சென்னை, மதுரை, ஒகேனக்கல், கோலார் தங்கவயல் உள்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ஸ்பாட்டில் விக்ரமின் உழைப்பை நேரில் பார்த்த தயாரிபாளர் ஞானவேல் ராஜா, `இது ஒரு உலகத்தர சினிமாவாக இருக்கும். இயக்குநர் பா.இரஞ்சித் கரியரிலும் நடிகர் விக்ரம் கரியரிலும் எங்களது கரியரிலும் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.’ என்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் நடக்கும் கதை என்பதால், அந்த காலத்தை கண்முன் கொண்டு வரும் லொக்கேஷன்களுக்காக இந்தியான் முழுக்க தேடுதல் வேட்டை நடத்தி, இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார் பா.ரஞ்சித். இந்த படத்திற்காக விக்ரமின் ஜோடியான மாளவிகா மோகனன், முறைப்படி சிலம்பம் கற்றுக்கொண்டிருக்கிறார். இதுவரை 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
அதிலும் தொடர்ந்து 50 நாட்கள் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது விக்ரம் ‘பொன்னியின் செல்வன் 2’ புரோமோஷனுக்கான ஊர் ஊராக பறக்க வேண்டியிருப்பதால், அவருக்காக படப்பிடிப்பை பிரேக் விட்டுள்ளனர். இதற்கிடையே அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது.
அங்கே தொடர்ந்து மூன்று வாரங்கள் இருக்கலாம் என்றும், இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும் தகவல். விக்ரமும் டேனியலும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டலாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். மே, ஜூன் மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.