ஜனங்களின் கலைஞன் எனப் பெயரெடுத்த விவேக், மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளையும், சமூக சீர்திருத்த கருத்துகளையும் தனது நகைச்சுவை மூலம் சொல்லி முத்திரை பதித்த விவேக்கின், சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே!
* விவேக்கின் நிஜப்பெயர் விவேகானந்தன். வீட்டில் அவரது செல்லப்பெயர் ராஜூ. அவரது பிறந்த நாள் நவம்பர் 19. அன்று தான் இந்திரா காந்தியின் பிறந்த நாளும் என்பதால், விவேக்கின் அம்மா மகிழ்ந்து `தேசியத் தலைவர் மாதிரி பிறந்திருக்கே!’ என பெருமிதமாக சொல்வார்.
* படப்பிடிப்பில் மறுநாளுக்கான வசனங்கள், காட்சிகளை முதல் நாளே கேட்டு வாங்கி வைத்துக் கொள்வார். மறுநாள் வரும்போதே, அந்த சீனுக்கான ரிகர்சல்களையும் செய்து தயாராகவே வந்துவிடுவார். அவருடன் இணைந்து நடிப்பவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தார்.
* உடல்நலனிலும் அக்கறை உள்ளவர். அதிகாலையில் பல கி.மீ சைக்கிளிங் செல்வார். `தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பதைக் கடைப்பிடித்து வந்தார். அவரது அலுவலகத்தில் உள்ள அவரது பர்சனல் அறையில் அதைப் பெரிய எழுத்துகளில் பிரின்ட் அவுட் எடுத்தும் ஒட்டியிருந்தார்.
* அதே சமயம் சென்னை நகருக்குள் சைக்கிளிங் செய்வது அவருக்குப் பிடிக்காமல் போனது. `இந்த சிட்டில சைக்கிள் ஓட்டினா உடம்பு இளைக்கும். ஆனா, கண்டிப்பா ஆஸ்துமா வந்துடும்! லாரி, பஸ் விடுற புகை, குப்பை லாரி அள்ளித் தெளிக்கற குப்பைகளுக்கு மத்தியில சைக்கிள் ஓட்டணும்’ எனச் சொல்லி, நகரில் சைக்கிள் ஓட்டுவதைக் குறைத்துவிட்டார்.
* கமலுடன் இணைந்து நடிக்கவில்லையே என அவருக்குள் ஒரு ஏக்கம் இருந்தது. அந்த ஆசையும் `இந்தியன் 2’வில் நிறைவேறியது. சில காரணங்களால் `இந்தியன் 2′ படப்பிடிப்பு தாமதப்பட, அதற்குள் கால தேவன் விவேக்கை அழைத்துக் கொண்டான். `இந்தியன் 2′ படத்தில் அவரது காட்சிகள் இடம் பெறவில்லை யென்றால் `லெஜண்ட்’ தான் அவரின் கடைசி படம்.
* புத்தகப் ப்ரியர். தனது அலுவலகத்தில் மினி லைப்ரரி வைத்திருந்தார். பயணங்களின் போது மறக்காமல் இரண்டு புத்தகங்களாவது அவர் கூடவே பயணிக்கும். தவிர, அவரது நட்பு வட்டம் பரிந்துரைக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கியும் விடுவார்.
* இசைஞானியின் தீவிர ரசிகர் மட்டுமல்ல, இசையிலும் ஈடுபாடு உள்ளவர். பியானோ நன்கு வாசிப்பார். ‘மனம் அலையும் , வாழ்வில் ஜெயித்தால்! மனம் அடங்கும், இசையில் லயித்தால்..!’ என்பார். இளையராஜா புது ஸ்டூடியோ தொடங்கியதும், அங்கே சென்று அழகான அன்பளிப்பு வழங்கி மகிழ்ந்ததுடன் ராஜாவின் முன்பு பியானோ வாசித்து பாராட்டைப் பெற்றார்.
* வள்ளலார் மீது தனிபெரும் பற்று கொண்டவர். வள்ளலார் தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை `வள்ளலார் நெடுஞ்சாலை’ என்று பெயர் சூட்ட, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவும் அளித்திருக்கிறார்.
* ‘பசுமை கலாம்’ திட்டத்தின் மூலம் முதன்முதலில் மரக்கன்றுகள் நட ஆரம்பித்தார். “நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும். மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையன தூய்மையான ஆக்சிஜன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததால், மரக்கன்றுகள் நட ஆரம்பித்தேன்” என்றார் விவேக்.
* இப்போது விவேக் விட்டுச் சென்ற மரம் நடும் பணியை அவரது மனைவி அருள்செல்வி விவேக், தொடர்கிறார். “என் கணவரிடம் கலாம் ஐயா ஒரு கோடி மரங்கள் நடும் பணியினைக் கொடுத்திருந்தார். அவர் வாழ்நாளில் 37 லட்சம் மரங்களை நட்டுள்ளார். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தோடு இணைந்து நான் இப்போது அப்பணியினைத் தொடர்கிறேன்” என்கிறார் அருள்செல்வி விவேக்.