அண்ணாமலை ஹெலிகாப்டரில் கட்டு கட்டாக பணமா? உடுப்பியில் நடந்தது என்ன? காங்கிரஸ் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார வியூகம் என மும்முரம் காட்டி வருகிறார்.

பாஜக வியூகம்

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகின்றனர். லிங்காயத்து சமூகத் தலைவர்கள் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக பிற சமூகத்தினரை குறிவைத்து களப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இவற்றுக்கு அண்ணாமலையின் வியூகங்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொறுப்பாளராக அண்ணாமலை

இந்த சூழலில் அண்ணாமலைக்கு எதிராக கவுட் தொகுதி
காங்கிரஸ்
வேட்பாளர் வினய் குமார் சோரகே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அண்ணாமலை தன்னுடன் கட்டுக் கட்டாக பணத்தை கொண்டு சென்றார். அவற்றை உடுப்பியில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார்.

ஹெலிகாப்டரில் பணம்

மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த அண்ணாமலை அதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது, நான் ஒரு சாமானியன், எங்களின் கொள்கை வேறு. நேரம் வீணாவதை தவிர்க்கவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். மொத்தம் 5 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவசரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அண்ணாமலை விளக்கம்

சிக்கமகளூரு, தீர்த்தஹள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே ஹெலிகாப்டரில் பயணித்தேன். அவர்களை போல் செயல்படுவோம் என நினைத்து விட்டார்கள். எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தோல்வி பயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டனர்.

தேர்தல் அதிகாரி பதில்

இதனால் தான் பொய்களை வாரி இறைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உடுப்பிக்கு திங்கள் அன்று காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டரில் அண்ணாமலை வருகை புரிந்தார். அவரது ஹெலிகாப்டரில் சில பைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கர்நாடக தேர்தல் சர்ச்சை

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் எதுவும் இல்லை. பின்னர் கடியாளிக்கு அருகே உள்ள ஓஷன் பியர்ல் ஓட்டலுக்கு பிற்பகல் 2 மணிக்கு வருகை புரிந்தார். அண்ணாமலை பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எந்த ஒரு இடத்திலும் தேர்தல் விதிமீறல்கள் நடக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.