மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில நாள்களாக முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி. பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதனை சரத் பவாரும், அஜித் பவாரும் மறுத்து வந்தனர். அஜித் பவார் 32 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் சேரப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அஜித்பவார் கூட்டி ஆலோசித்து இருப்பதாகவும் செய்தி வெளியானது. சிவசேனாவை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. புனேயை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அஜித்பவார் இன்று அளித்துள்ள பேட்டியில், “கடந்த சில நாள்களாக வெளியாகி இருக்கும் செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை. இது தொடர்பான செய்திக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். தொடர்ந்து இருப்பேன். எனக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும். கட்சியை உடைக்க எம்.எல்.ஏ.க்கள் அல்லது கட்சி தலைவர்கள் யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை.
மீடியாக்கள் தேவையே இல்லாமல் வதந்தியை பரப்பிக்கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் இன்று என்னை சந்திக்க வந்தனர். இது வழக்கமாக நடக்ககூடிய ஒன்றுதான். அவர்கள் வேறு எந்த நோக்கத்துடனும் வரவில்லை. இச்செய்திகளால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இது போன்ற செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. முக்கிய பிரச்னைகளான விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னையிலிருந்து மக்களை திசை திருப்பவேண்டும் என்ற நோக்கில் இந்த வதந்தி பரப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே அஜித் பவார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க.வில் சேருவது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. மேற்கு மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு வலுவான தலைவர் இல்லாமல் இருக்கிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் புனேயில் பா.ஜ.க.தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை பா.ஜ.க.வால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவேதான் அஜித் பவாரை எப்படியும் தங்களது பக்கம் இழுக்கவேண்டும் என்பதில் பா.ஜ.க.தீவிரமாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. கடந்த 12-ம் தேதி சதாரா மில் ஊழல் பிரச்னையில் அஜித் பவாரின் பெயரை அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கையில் இருந்து விடுவித்துவிட்டது.
அதனை தொடர்ந்தே அஜித் பவார் பா.ஜ.க. சேருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது சேராவிட்டாலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் அஜித் பவார் பா.ஜ.க.வில் சேருவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிவசேனாவை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. எனவே எந்நேரமும் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்ப்பை தொடர்ந்தே அஜித் பவார் பா.ஜ.க.வில் சேருவது குறித்து இறுதி முடிவு எடுக்க இருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், அனில் தேஷ்முக், நவாப் மாலிக், பிரபுல் பட்டேல், ஹசன் முஸ்ரிப், சலில் தேஷ்முக் உட்பட முக்கிய தலைவர்களுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சிவசேனாவில் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்களை மிரட்டித்தான் கட்சி மாறச்செய்தனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதே முறையை இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பயன்படுத்த பா.ஜ.க.முயன்று வருகிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.