பொதுமக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய இடமாக காலி முகத்திடல் காணப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளாலும், ஆர்ப்பாட்டங்களினாலும், காலி முகத்திடல் வெகுவாக சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கை துறைமுக அதிகாரசபையானது இப்பகுதியை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது.
கடந்த போராட்ட காலத்தில் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் சுமார் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலை பொதுமக்களுக்கு சுதந்திரமாக பொழுதைக் கழிப்பதற்கும்;, புனிதமான சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் அனுமதி வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.